விண்வெளிக்கு சென்ற வீரப்பெண்ணின் நினைவு தின சிறப்புகள்

  Sujatha   | Last Modified : 01 Feb, 2018 11:10 am

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையகாது. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் 15வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது

இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.

ஆரம்ப கல்வியை அரசு பள்ளியில் தொடங்கிய கல்பனா சாவ்லா. 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107)-ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லாவுக்கு அப்போது வயது 41.

இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் வீரதீர சாகசங்கள் புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் இந்திய அரசு விருது வழங்கி வருகிறது. இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்' என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணின் நினைவு நாளில் நாம் அவரை போற்றுவோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close