உலகின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பிறந்த தினம் இன்று!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 02 Feb, 2018 02:22 pm

உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர், எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியரான குஷ்வந்த் சிங் பிறந்த தினம் இன்று. அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் முக்கிய சில சாதனைகள். புகழ்பெற்ற எழுத்தாளரான குஷ்வந்த் சிங் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் புகழ்பெற்ற கட்டிடக்கலை வல்லுநர் ஆவார்.

தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்த குஷ்வந்த், பட்டப்படிப்பை லாகூர் அரசு கல்லூரியில் முடித்தார். பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். தொடர்ந்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1947ல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றினார். தொடர்ந்து 1951ல் அகில இந்திய வானொலியில் சில காலம் பணியாற்றிய இவர், இல்லஸ்டேட்டட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ், நேஷனல் ஹெரால்டு ஆகிய புகழ்பெற்ற இதழ்களில் ஆசிரியராக இருந்தார். 1980-86 காலகட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

இலக்கியப்பணி: இதற்கிடையே எழுத்தாளராக 'மனோஜ் மஜ்ரா' என்ற தனது முதல் நாவலை எழுதினார். முதலில் எந்த பதிப்பகமும் இதை வாங்க முன்வரவில்லை. தொடர்ந்து நாவல்களுக்கான ஒரு போட்டியில் இவரது நாவல் முதல் பரிசை வென்றது. பின்னரே அவரது நாவல் 'பாகிஸ்தான் போகும் ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் இதுவாகும்.

முக்கிய படைப்புகள்: “தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” உள்ளிட்டவை இவருடைய படைப்புகள். பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ள இவர் தன்னுடைய படைப்புகள் மூலம் சமூகம், மதம், அரசியல் என அனைத்து விதமான கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்தவர்.

சமூகப்பணி: இந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூக நலத்திட்டங்களை தெரிந்துகொள்ளும் நோக்கில், 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போதும் வெளியாகும் இந்த இதழ் தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது.

கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், பஞ்சாபி, உருது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முற்போக்குச் சிந்தனையாளர், மனிதநேயம் மிக்கவர். 'ட்ரூத் லவ் அண்ட் எ லிட்டில் மாலிஸ்’ என்பது இவரது சுயசரிதை நூல். ஆங்கிலம் மட்டுமின்றி, பஞ்சாபி, உருது, இந்தியிலும் எழுதியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளிலும் இவரது புத்தக வாசகர்கள் அதிகம். இவரது பல நூல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்: 1974ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” வழங்கி கெளரவிக்கப்பட்டார். ஆனால் அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு அளித்த விருதை திருப்பி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2006ம் ஆண்டு, பஞ்சாப் அரசால் அவருக்கு “பஞ்சாப் ரத்தன் விருது” வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு, இந்திய அரசால் அவருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டு, அவருக்கு “இந்திய சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.

மறைவு: மிகச் சிறந்த எழுத்தாளர், துணிச்சலான பத்திரிகையாளர் என்பதை தாண்டி வாழ்வில் எந்த பிரச்னையையும் நகைச்சுவையுடன் எதிர்கொண்டவர். தன்னுடைய இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 2014, மார்ச் 20 அன்று தனது 99வது வயதில் இயற்கை எய்தினார். எதையும் துணிந்து எழுதிய, சொல்லிய மூத்த பத்திரிகையாளருக்கு நம்முடைய அஞ்சலி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close