வீரத்தின் அடையாளம்... கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று!

  முத்துமாரி   | Last Modified : 03 Jan, 2018 10:33 am


இந்தியர்களை ஆட்சி செய்ய நினைத்த ஆங்கிலேயருக்கு பெரும் சவாலாக திகழ்ந்த கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று!

வரி செலுத்த மறுத்த கட்டபொம்மன்

தனது தகப்பனார் மற்றும் தமையன்களுக்கு உதவியாக இருந்து வந்த கட்டபொம்மன் 1790ல் பிப்ரவரி 2ம் தேதி 47-வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். அதுவரை நவாப் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இந்தியாவில் வணிகம் செய்வதற்காக வந்த கிழக்கு இந்திய கம்பெனி தங்கள் வசப்படுத்திய நேரம் அது. நவாப் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கான வரி வசூல் உரிமையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு வந்திருந்தது. இதனால், பாளையக்காரர்களிடம் வரி செலுத்தும்படி கூறப்பட்டது. பெரும்பாலான பாளையக்காரர்கள் வழக்கம் போல் வரி செலுத்திவிட்டனர். ஆனால், கட்டபொம்மன் வரி செலுத்த மறுத்தார். இதனால், 1797-ல் ஆங்கிலேய தளபதி ஆலன் முதன்முதலாக  பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.  

ஜாக்சன்-கட்டபொம்மன் சந்திப்பு

1797- 1798ல் ஆலன் பெரும் படையோடு கட்டபொம்மனை எதிர்த்து போரிட்டான். ஆனால், அந்த போரில் கட்டபொம்மனிடம் தோற்று உயிருக்கு பயந்து தப்பி ஓடினான் ஆலன். வேறு வழியின்றி, சமரச பேச்சுவார்த்தைக்கு கட்டபொம்மனை அழைத்தது கிழக்கிந்திய கம்பெனி. நெல்லை கலெக்டராக இருந்த ஜாக்சன், கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.

ஆனால் வெவ்வேறு இடங்களுக்கு வரச்சொல்லி அவரை அலைக்கழித்து இறுதியில் ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் கட்டபொம்மன் அதை முறியடித்து பாதுகாப்பாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். 

அந்த சமயத்திலும் வரி செலுத்துமாறு கட்டபொம்மனிடம் ஜாக்சன் கூறினார். அதற்கு கட்டபொம்மன் ‘நாங்கள் சுதந்திர மன்னர்கள். உங்களுக்கு வரிசெலுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். 


கட்டபொம்மன் கைது

இதனால் கட்டபொம்மனை அழித்தே தீர வேண்டும் என்ற நோக்கில் கிழக்கு இந்திய கம்பெனி, 1799-ல் மற்றொரு தளபதியின் தலைமையில் கட்டபொம்மனின் பகுதியை முற்றுகையிட்டது. இரு தரப்பினரும் கடுமையாக போரிட்டனர். பல உயிர்சேதங்கள் ஏற்பட்டன. கோட்டை வீழ்ந்துவிடும் என்ற இறுதிக்கட்ட நிலையில் கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். அக்டோபர் 1, 1799ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான், கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான். 

தூக்குமேடையில் கட்டபொம்மன்

1799ல் அக்டோபர் 19ம் தேதி கயத்தாறில் ஒரு புளிய மரத்தடியில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்திலும் உயிர்ப்பிச்சை கேட்காமல் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு  எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறியபோதும், அவரது வீரமும், தைரியமும் சிறிதும் குறையவில்லை. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அவரை நினைத்து பெருமிதம் அடைந்தனர். தூக்குமேடை ஏறியபிறகு, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் உயிரை விட்டிருக்கலாம்’ என கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். பின்னர் ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்பேரில் கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்டார். 

கட்டபொம்மன் நினைவு சின்னங்கள்


அவர் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில், கட்டபொம்மனுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. கட்டபொம்மனை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்ட 200ம் ஆண்டில், தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது. இந்தியாவின் விஜயநாராயணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.

1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன. 1959-ல் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சங்களில் கட்டபொம்மனுக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close