‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்!!

  Sujatha   | Last Modified : 30 Apr, 2018 07:46 am


19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே விருதினை’ இந்திய அரசு, 1969 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்திய சினிமாவின் அங்கமாக இருந்த தாதாசாஹேப் பால்கே பற்றிய சிறு தொகுப்பு:

0 மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.

0 பால்கே 1885-ல் மும்பை ஜே.ஜே.கலைக் கல்லூரியில் பல கலைகளையும் கற்றார். புகைப்படக் கலை, ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி குறித்து பரோடாவில் உள்ள கலா பவனில் 1890-ல் பயின்றார். லித்தோகிராஃபி அச்சுக்கலையில் நிபுணத்துவம் பெற்று, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவுடன் இணைந்து பணியாற்றினார். கார்ல் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் மேஜிக் நிபுணரை சந்தித்து அவருடன் சில காலம் பணிபுரிந்தார். மேஜிக் ஷோக்கள் நடத்தினார்.   

0 ‘தி லைஃப் ஆஃப் தி கிரிஸ்ட்’ என்ற ஊமைப்படத்தைப் பார்த்து, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், தனது தொழிலைக் கைவிட்டு, திரையில் இந்திய கடவுள்களைக் கற்பனையாகக் கூறும், நகரும் படங்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். 

0 திரைப்படம் பற்றி தெரிந்துகொண்டதும், சின்னச் சின்ன படங்கள் எடுத்துப் பழகினார். பிறகு இங்கிலாந்து சென்று வால்டன் ஸ்டுடியோவில் சினிமா தொழில்நுட்பம் கற்றார். பார்வை மங்கியதையும் பொருட்படுத்தாமல் சினிமா எடுப்பதில் ஆர்வம் காட்டினார்.

0 பெண் வேடங்களுக்கு ஆண்களை நடிக்கவைத்தார். நடிப்பு இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் மற்ற நேரங்களிலும் சேலை கட்டியபடியே இருக்கவேண்டும், சமையல் வேலைகள் செய்யவேண்டும் என்று உத்தரவுகள் போட்டார்.

0 சினிமா பற்றி தெரிந்தது அவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார். மனைவி அனைத்து விதங்களிலும் உதவினார்.

0 1912ல் பால்கே அவர்கள், அவரது முதல் படமான, ‘ராஜா ஹரிச்சந்திராவை’ எடுத்தார். இந்திய திரைப்பட துறையின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. 

0 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துக்காகவே அர்ப்பணித்த தாதாசாஹேப் பால்கே 74 வயதில் (1944) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு இவரது பெயரிலான விருதை இந்திய அரசு 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. 1971-ல் இவருடைய உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.