ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? #TeachersDaySpecial

  முத்துமாரி   | Last Modified : 05 Sep, 2018 12:25 pm
what-qualities-should-teacher-have-teachers-day-special

நமக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டப்படுகிறது. நம் இந்திய நாட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே! 

டாக்டர் ராதாகிருஷ்ணன்:

திருத்தணியில் பிறந்த இவர் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர். பள்ளி மற்றும் இளங்கலை படிப்பை அவரது சொந்த ஊரில் படித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவுடன் தன்னுடைய ஆசிரியர் பணியை தொடங்கினார். அவருடைய மாணவர்கள், தன்னுடைய ஆசிரியரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டதால், டாக்டர் ராதாகிருஷ்ணனும் அதற்கு ஒப்புக்கொள்ள 1962ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 

இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத்தலைவர் , இரண்டாவது குடியரசுத்தலைவர் என்ற பெருமையை பெற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். 1962 முதல் 1967 வரை இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தார். "உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி வீணாகிவிடும்" இது அவருடைய கருத்து.

ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு அப்போதும், இப்போதும், எப்போதும் தனித்து விளங்குபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

பொதுவாக மாதா,பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியரே நம்முடைய வாழ்வின் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர். ஆனால், தற்போதுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் முதல் இடத்தை பெறுகின்றனர் என்று தான் கூற வேண்டும். 

விஞ்ஞான மயமான இந்த உலகில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தையை வீட்டில் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்கின்றனர் பெற்றோர்கள். 2 வயது ஆனதுமே, ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டு அந்த குழந்தையின் வாழ்க்கை பள்ளியில் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி என சென்று கொண்டிருக்கையில், அவர்களின் 3ல் 1 பங்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.பள்ளிப்படிப்பு வரை மாணவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்களோ அதுவே அவர்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. இந்த காலகட்டத்தில் பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு எவ்வளவு முக்கியம். ஆக, இப்போது இருக்கும் கால கட்டத்தில், ஒரு குழந்தை எந்த மாதிரி வளர்கிறது என்பது அந்த ஆசிரியரை பொறுத்தும் அமைகிறது.

ஒரு குழந்தைக்கு  ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் கற்று தருவது ஆசிரியரே.  வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். 

ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?

► ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மாணவர்களின் நிலைக்கு இறங்கி வர அவர்கள் தயாராக இருக்க வேண்டும். 

► மாணவர்களின் முழுக்கவனமும் தன்னிடம் இருக்குமாறு பாடம் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு புரியும் விதத்தில் பாடம் கற்பிக்க வேண்டும். 

► எப்போதும் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் வலம் வர வேண்டும். அதுவே மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் அளிக்கும். 

► பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுவான விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய் இருத்தல் வேண்டும்.

► தனக்கு செலவிடும் நேரத்தை விட மாணவர்களுக்கு அதிக நேரம் செலவழிப்பவராக இருக்க வேண்டும். 

► மாணவர்களுக்கு கல்வியின் மீது உள்ள ஆர்வத்தை தூண்ட வேண்டும். அவர்களது தனிப்பட்ட திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களது சாதனைக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். 

► எதில் விருப்பம் உள்ளதோ, அதை கண்டறிந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். மாணவன் படிக்கவில்லை என்றால், அவர்களுக்கு புரியும் படியாக நீங்கள் எவ்வாறு சொல்லி கொடுக்கலாம் என யோசிக்கலாம்.

► ஒரு விளக்கத்தை கொடுக்கும் போது, செய்முறை அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்த்தினால் படிப்பின் மீது ஆர்வம் வரும்.

► ஒரு ஆசிரியர், மாணவரின் சுக, துக்கங்களை கேட்டு ஆறுதலுடன் இருப்பதும் அவசியம்.

► அனைத்து நற்பழக்கங்களிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தால் அவர்களுக்கு நீங்கள் சொல்லவே தேவையில்லை. உங்கள் வழியை தானாக அவர்கள் பின்பற்றுவார்கள். 

► ஆக, மொத்தத்தில் ஆசிரியர் என்பவர் அனைவருக்கும் ஒரு படி மேலாக இருக்க வேண்டும். ஆசிரியரின் பணி மகத்தானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

அனைத்து ஆசிரியர்களுக்கும் newstm சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close