தற்கொலை தடுப்பு தினம்: மனம்திறந்து பேசுங்கள் மாணவர்களே...

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 04:03 pm
suicide-prevention-day-increasing-suicide-among-students

வாழ்க்கை நம் மீது வீசும் பிரச்னைகளை சமாளிக்கும் மனவலிமை எல்லோருக்கும் அமைவதில்லை. பிரச்னைகளில் இருந்து விடுபட பலர் எடுக்கும் ஆயுதம், மது, போதைப் பொருட்கள் போன்றவை. அதிலும் நிம்மதி கிடைக்காத சிலர் எடுக்கும் ஆயுதம் தான், தற்கொலை. உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, நம் நாட்டில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகளும் அதற்கான காரணங்கள் குறித்தும் பார்க்கலாம்.

உலக சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 21.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற வளர்ந்த மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. குடும்ப பிரச்னைகள், கடன் பிரச்னைகள், திருமண முறிவு, வரதட்சணை கொடுமைகள் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலைகள் அதிகரிப்பது ஒரு புறம் என்றால், மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வது மறுபுறம். 2014 முதல் 2016ம் ஆண்டு வரை, 26,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதில் 7,400 பேர் பரிட்சையில் தோற்றதால் தற்கொலை செய்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. 55 நிமிடங்களுக்கு ஒரு மாணவர் நம் நாட்டில் தற்கொலை செய்கிறார் என்கிறது சமீபத்திய ஆய்வு. 

அதிக மாணவர்கள் தற்கொலை செய்யும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 மாணவர்கள் மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்து வருகின்றனர். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கு, பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களில் அளிக்கப்படும் அழுத்தம் தான் முக்கிய காரணம். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், தவறான முடிவை நோக்கி எளிதாக செல்கிறார்கள். உயர்கல்விக்கு பிரபலமான ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அங்கு தற்கொலை செய்பவர்களில் 90 சதவீதம் பேர் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.  

தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம் 1,500 மாணவர்களிடம் நடத்திய சர்வேயின் முடிவில், 11% கல்லூரி மாணவர்களும், 7-8% பள்ளி மாணவர்களும், தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. 

எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாணவ மணிகள், பட்டாம்பூச்சி போல பறக்க வேண்டிய வயதில், கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சித்தரவதை அனுபவிக்கின்றனர். இதுகுறித்து எத்தனை எத்தனை ஆய்வுகள் வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வரை எந்த பயனும் இல்லை. அதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியம். தொடர்ந்து இதுபோன்ற தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்காமல் இருக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பிள்ளைகள் எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசும் நிலையை பெற்றோர்கள் வீட்டில் உருவாக்க வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களை உடனே கண்டறிந்து, அவர்களுக்கு தக்க உதவிகள் புரியவும், ஆலோசனைகள் நடத்தவும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் முயற்சிகள் எடுக்க வேண்டும். மனநல ஆலோசகர்களிடம் செல்வதன் மீதிருக்கும் தவறான எண்ணம் பொதுமக்களிடம் இருந்து அகற்றப்பட வேண்டும்.

 தற்கொலைகளை தடுக்க அரசும் பல தனியார் அமைப்புகளும் உதவி எண்களையும், மையங்களையும் நிறுவியுள்ளன. அதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுமாறு விளம்பரபடுத்த வேண்டும். உலகம் முழுக்க தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், இளம் விஞ்ஞானிகளாகவும் சாதனை புரிந்துவருபவர்கள் இந்திய மாணவர்கள். அவர்கள் சிறகடித்து பறக்க வருங்காலம் இடம் கொடுக்கும் என நம்புவோம்..!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close