மகாகவி பாரதியாரின் 97வது நினைவு தினம் இன்று...

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 12:14 pm
subramanya-bharathi-s-97th-death-anniversary

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்ட வீரர் என பன்முகங்களை கொண்ட மகாகவி பாரதியார் குறித்த சில முக்கிய தகவல்கள்

► மகாகவி, முறுக்குமீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என பல புனைபெயர்களை பெற்ற பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882ல் பிறந்தார். பெற்றோர்: சின்னசாமி- இலக்குமி அம்மையார். 

► 5 வயதில் தனது தாயையும், 16 வயதில் தன்னுடைய தந்தையையும் இழந்து வறுமையில் வாடினார். இருப்பினும், கல்வி மீதும், தமிழ் மீதும் அவர் அதீத காதல் கொண்டிருந்தார். 11வது வயதிலே தமிழில் புலமை பெற்று விளங்கிய அவரது திறமையைக் கண்டு, எட்டையபுர மன்னர் வழங்கிய சிறப்பு பெயர் தான் பாரதியார். பாரதி என்றால் 'சரஸ்வதி' என்று அர்த்தமாம். 

► பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகம் சென்று சமஸ்கிருதம், இந்தி மொழியை கற்றறிந்தார். 14 வயதிலேயே, இவருக்கும், செல்லம்மா என்ற 7 வயது சிறுமிக்கும் திருமணம் அரங்கேறியது. பின்னாளில் இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்.

► தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், வங்கம் உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் பாரதி. இதனால்தான், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம்" என்று பாடினார். 

► 4 வருடம் காசியில் இருந்துவிட்டு திரும்பிய அவர், என்னசெய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த காலத்தில்,  எட்டயபுர அரசவையில் கவிஞராக பணியாற்ற அவருக்கு அழைப்பு வந்தது. அரசவைக்கவிஞராக பணியாற்றிய பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியரானார். அதன்பிறகு பத்திரிகையாளர் ஆனார். 

► பாஞ்சாலி சபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, புதிய ஆத்திச்சூடி, ஞானரதம், தேசிய கீதங்கள் போன்ற புகழ் பெற்ற காவியங்களை பாரதியார் எழுதியுள்ளார்.  சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர்.

► ஆங்கில கவிஞர் ஷெல்லி மீது பாரதியாருக்கு அளவுகடந்த ஈர்ப்பு உண்டு. இதனால், ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன் ஆகிய பெயர்களிலும் கட்டுரை எழுதியுள்ளார். 

► தேசத்தந்தை காந்தியடிகளும், மகாகவியும் தங்களது வாழ்நாளில் ஒரேயொருமுறை தான் நேரடியாக சந்தித்து கொண்டனர். 1919 பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்த போது, ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்க பாரதியாரை காந்தி அழைத்துள்ளார். ஆனால் காந்தி, வேறுநாளுக்கு நிகழ்ச்சியை மாற்ற முடியுமா என்று கேட்க, அதற்கு பாரதி, முடியாது என்று கூறினார். 'உங்களது இயக்கத்துக்கு வாழ்த்துக்கள்' என்று கூறி பாரதியை அனுப்பி வைத்தார் காந்தி. அப்போது அருகில் இருந்த ராஜாஜியிடம், 'இவரை பத்திரமாக பாதுக்காக்க வேண்டும்' என்றாராராம் காந்தி. 

► இவர் தனது பாடல்கள் மூலமாக மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டினார். இவரது எழுச்சி மிக்க பாடல்கள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்தமையால் சிறைக்கும் சென்று வந்தார். 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என பெண்ணுரிமைக்காக முதலில் குரல் கொடுத்தவர் பாரதி. பெண்மையை போற்றும் பல பாடல்களை வடித்துள்ளார். 

► காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதி தான். 

► பாரதி தனது மனைவி செல்லம்மாவை சாலையில் கூட்டிச் செல்லும் போது, மனைவியின் தோளில் கைபோட்டு தான் கூட்டிச் செல்வாராம். 'பைத்தியங்கள்' என ஊரார் கிண்டல் செய்வார்களாம்.. அப்போது உருவான பாட்டு தான் `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’..

► இறுதி காலகட்டத்தில் வறுமையிலே வாழ்க்கையை  ஓட்டிய பாரதி, தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கை வைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை. 

► 1921ம் ஆண்டு வழக்கமாக தான் செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சென்ற அவரை, அங்குள்ள யானை தூக்கி எறிந்தது. தலையில் படுகாயத்துடன் இருந்த அவரை வயிற்றுவலியும் தொற்றிக்கொண்டது. அதற்கான மருந்துகளையும் அவர் எடுக்க முன்வரவில்லை.  'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. 1921 செப்டம்பர் 11ம் தேதி தனது இன்னுயிரை நீத்தார். சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவரது  இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!  

► வெறும் 39 ஆண்டுகளே அவர் இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், அவரது பாடல்கள் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்பதில் எந்த ஐயமுமில்லை! 

ஜெயஹிந்த்!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close