கூகிள் டூடுள் கொண்டாடும் டாக்டர் ஜி. வெங்கடசாமி யார் தெரியுமா? 

  சுஜாதா   | Last Modified : 01 Oct, 2018 08:14 am

dr-govindappa-venkataswamy

கண் மருத்துவத்தில் உலகளாவிய சாதனை படைத்தவர் தான் டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற  டாக்டர் ஜி. வெங்கடசாமி  (Dr.G. Venkatasamy). அவர் பிறந்த தினமான இன்று அவரை பற்றி தெரிந்து கொள்ள சில அரிய தகவல்கள்..

* எட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில், ஒரு சாதாரண விவசாயின் மகனாக அக்டோபர் 1, 1918 ல் பிறந்தார். மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில், அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம் சிறுவனாக இருந்த வெங்கடசாமியை  மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் ஆட்கொண்டது. 

* கோவில்பட்டியில் உயர்நிலைப் பள்ளி பயின்ற இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்றார்.  வீட்டிலிருந்த புத்தகங்கள் தவிர, மேலும் பல நூல்களைப் படித்து, அறிவை பட்டைத் தீட்டிக்கொண்டார். 

* சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவுடன் ராணுவத்தில் மருத்துவராக சேர்ந்தார். பர்மா காடுகளில் முகாமிட்டிருந்தபோது விஷப் பூச்சிகள் கடித்ததால், தீராத சரும நோய்க்கு ஆளானார். இதனை தொடர்ந்து ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டார்.

* பின்னர் மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்ற இவரை முடக்குவாதமும் தாக்கியது. இது இவரது கைவிரல்களைக் கடுமை யாக பாதித்தது, பேனாகூட பிடிக்க முடியாத நிலை. ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம் ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார்.

* கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார். சென்னை எழும்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கண் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். தானாகவே பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டு, திருகிக் கொண்டிருந்த விரல்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, கண் அறுவை சிகிச்சை நுட்பங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

* ஆனாலும் இவரது விரல்களைக் காரணம் காட்டி, இவருக்கு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1956-ல் மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேறு யாரும் முன்வராததால் இவர் மதுரைக்கு அனுப்பப்பட்டார்.

* வாழ்நாளில் ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். பணி ஓய்வு பெற்ற பிறகு தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில் அரவிந்த் ஐ கிளினிக் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையைத் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.

* இன்று இந்த மருத்துவமனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி உலகப் புகழ்பெற்ற கண் மருத்துவமனையாக சேவையாற்றி வருகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் இலவசப் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது.

* பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளையும் அமெரிக்க கண் மருத்துவ அமைப்பு, பில் & மிலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். ஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட ஜி.வெங்கடசாமி 2006 ஆம் ஆண்டு, தனது 87-வது வயதில் காலமானார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.