நையாண்டி நாயகன் சோ-வின் பிறந்தநாள் இன்று!  

  சுஜாதா   | Last Modified : 05 Oct, 2018 11:58 am

cho-ramaswamy-biography

பத்திரிகையாளர், நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,இயக்குனர்  என பன்முகங்களைகக் கொண்ட சோ ராமசுவாமி. 1934ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள்  சென்னையில் உள்ள  மைலாப்பூரில் ஸ்ரீனிவாச ஐயர் மற்றும் இராஜம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். பி.எஸ்.சி., பி.எல்., படித்துள்ள இவர்  வக்கீலாக தொழிலைத் தொடங்கினார். 1957 - 1962 ஆம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிய இவர், 1978ம் ஆண்டு வரை TTK குழுமத்திற்கு சட்ட ஆலோகசராக இருந்துள்ளார்.1966 இல் ஸ்ரீமதி என்பவரை வாழ்க்கை துணையாக ஏற்ற இவருக்கு ஒரு மகனும்( ஸ்ரீராம்), மகளும்(சிந்துஜா ) உள்ளனர்.

1963ல் வெளியான 'பார் மகளே பார்' என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்குள் நுழைந்தார். ஆறிலிருந்து அறுபதுவரை, அடுத்த வாரிசு, மனிதன், கழுகு, குரு சிஷியன், காதலா காதலா  உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆறு தெலுங்கு மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரங்களில் நகைச்சுவையுடன் அரசியலை வெளிப்படுத்துவது இவரது திறமையுடன் கூடிய சிறப்பு.  சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ள இவர் எழுதிய, "முகமது பின் துக்ளக்' எனும்  நாடகம் மிகவும் புகழ் பெற்றது. பின்பு இது  சோ, மனோரமா உள்ளிட்டடோர் நடிப்பில் திரைபடமாக வெளிவந்து வெற்றிபெற்றது. 1970ம் ஆண்டு  "துக்ளக்' என்ற அரசியல் வார பத்திரிகையை தொடங்கிய இவர் இதன்பின் தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் விமர்சிக்கும் பிரபல பத்திரிகையாளரானார்.

இவரின் "அரசியல் நையாண்டி' எழுத்துக்கள், பத்திரிகை உலகில் இவருக்கு தனி இடம் வகுத்து தந்தது. இந்தி மொழியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வார இதழ்   பாஞ்சஜன்ய. சோ அவர்களின் பத்திரிகை உலகின் சேவையை பாராட்டி 1998 நவம்பர் 26ல் நசிகேதா விருதை வழங்கியது. மேலும் பத்திரிகைப் பணிக்காக பி.டி.கோயங்கா விருது, புலனாய்வுப் பத்திரிகைத் துறைக்கான கந்தூரி வீரேசலிங்கம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஆக  நியமிக்கப்பட்டார். அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமானவராக இருந்து வந்தார்.  2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். தனது பத்திரிகை மூலம்  மூப்பனார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வாஜ்பாய், அத்வானி, மோடி உள்ளிட்ட தலைவர்களை பற்றி தைரியமாக  விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளார். எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் கை தேர்ந்த  'சோ ராமசுவாமி' அவர்கள் டிசம்பர் 7, 2018 ம் ஆண்டு  காலமானார்.

குறிப்பு: பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் ப்ராண்டுக்கு  தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள். ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ. 1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.
எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன. ஆனால்- சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் அல்லது எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.