தாய்ப்பால் குழந்தையின் உரிமை!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகத் தாய்ப்பால் விழிப்புணர்வு தினம்! ஆகஸ்டு 1 முதல் 7 குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பது மருத்துவர்கள் பரிந்துரை. தாய்ப்பால் வெறும் ஊட்டச்சத்தை, நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அளிப்பது இல்லை, நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும் உதவுகிறது. இன்றைக்கு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடும் , நோய்த்தொற்றும்தான். இந்த இரண்டையும் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. மேலும், குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்காலம் சிறப்புடன் இருக்க, தாய்ப்பால் உதவுகிறது. இப்படி, மூளை செயல்திறன் அதிகமாக உள்ள, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களால் நாளைய சமுதாயத்தைத் திறம்பட வழி நடத்த முடியும். தாய்க்கு ஸ்பெஷல் உணவு அவசியமா? நம் சமுதாயத்தில் அம்மா இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. உண்மையில் , கர்ப்பத்துக்கு முன்பு, கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட்டுவந்தார்களோ, அதையே சாப்பிட்டால் போதும். சத்துமிக்க, ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் அவ்வளவே. பாலூட்டும் காலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கலோரி மற்றும் புரதம் தேவைப்படும். அதை ஈடுகட்டும் வகையில் உணவு எடுத்துக்கொண்டால் போதும். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கால்சியம் இருக்கிறது. இந்தக் கால்சியத்தைத் தாயின் எலும்பில் இருந்து உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட, தாய்மார்கள் கட்டாயம் இரண்டு டம்ளர் பால் அருந்த வேண்டும். அது இல்லாமல் நீராகாரம், ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். அசைவ விரும்பிகள் அசைவம் சாப்பிடலாம். சிலருக்கு அலர்ஜி பாதிப்பு இருந்தால், அவர்கள் டாக்டர் பரிந்துரையின்போரில் சிலவற்றைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் புகட்ட வேண்டும்? குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்ட தொடங்க வேண்டும். இதன் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த சீம்பால் சிசுவுக்குக் கிடைக்கிறது. தாய்ப்பால் அருந்துவதால், குழந்தைக்கு மட்டும் நன்மை இல்லை , தாய்க்கும் நன்மை கிடைக்கிறது. தாய்க்குக் கிடைக்கும் நன்மைகள்! பிரசவத்தின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். தாய்ப்பால் புகட்டுவதன் மூலம், உ ட லில் ஆக்ஸிடோஸின் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரந்து, கர்ப்பப்பையைச் சுருக்கம் அடையச் செய்யும். இதன் மூலமாக உதிரப்போக்கு குறைய ஆரம்பிக்கும். தாய்ப்பால் புகட்டுவதன் நன்மையைத் தாய் உடனடியாகப் பெற முடியும். தொடர்ந்து தாய்ப்பால் புகட்டிவருவதன் மூலம், தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 10 கிலோ வரை எடை அதிகரிப்பு இருக்கும். தொடர்ந்து ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவே, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கலாம். அதுமட்டும் அல்ல, தாய்ப்பால் புகட்டுவது இயற்கையான கருத்தடையாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் வரை பெரும்பாலானான பெண்களுக்குக் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புக் குறைகிறது. குழந்தைக்குக் கிடைக்கும் நன்மைகள் குழந்தை பிறக்கும்போது, அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அந்தக் குறையைப் போக்குவது தாய்ப்பால்தான். குழந்தை பிறந்ததும் முதல் இரண்டு மூன்று நாட்களுக்குச் சுரக்கும் பாலில், இம்யுனோகுளோபுளின் என்ற புரதம், ரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். இவை, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கின்றன. மேலும், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து என மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கின்றன. மற்ற பால்களில் இந்த சத்துக்கள் இருந்தாலும், சரியான விகிதத்தில் இருப்பது இல்லை. அதுமட்டும் அல்ல... தாய்ப்பாலில் உள்ள புரதம் உயர் தரமானதாக இருக்கிறது. எளிதில் குழந்தை செரிமானம் செய்யக்கூடிய வகையிலும் இருக்கிறது. தாய்ப்பாலில், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டாரின், சிஸ்டின் போன்ற அமினோஅமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாமே, குழந்தையின் தேவையைப் பொருத்து மிகச்சரியான அளவில் அமைந்திருப்பதுதான் தாய்ப்பாலின் சிறப்பு. எனவே, குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியம் காக்க கட்டாயம் குழந்தை பிறந்த ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்டுவது அவசியம். இது குழந்தையின் உரிமையும் கூட!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close