மது நல்லதா? குழப்பும் ஆய்வுகள்... உஷார் குடிமக்களே!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

புகைபிடித்தல், மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு என்று தெரியும். ஆனால், மிகக் குறைந்த அளவில் மது அருந்துவது தவறில்லை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. அதிலும், ரெட் ஒயினை ஒரு முறை மிகக் குறைந்த அளவில் குடித்துவந்தால் இதய நோய்கள் வராது என்றும் குழப்புகிறது. புகையிலைப் பழக்கம் எந்த ரூபத்தில் இருந்தால் விட்டுவிட வேண்டும் என்று ஸ்டிரிக்ட் ரூல் போடும் டாக்டர்கள், மது பிரச்னையில் சற்று அடங்கிவிடுகின்றார். வெளிநாட்டு மருத்துவ இதழ்களில் வெளியிடப்படும் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் குறைவான அளவில் மது அருந்துதல் நல்லது என்றே கூறிவருகின்றன. இந்த ஆய்வு முடிவுகளை நம்முடைய மருத்துவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், நம் ஊரில் உள்ளவர்கள் குடிக்க ஆரம்பித்துவிட்டால் கட்டுப்பாடு இன்றி குடித்துவிடுகின்றனர். இதனால், மிகக் குறைந்த அளவில் கூட டாக்டர்கள் பரிந்துரைப்பது இல்லை. இந்தநிலையில், மது அருந்துதலுக்கு ஆதரவாக கடந்த திங்கட்கிழமை ஜேர்னல் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், வாரத்துக்கு 14 கிளாஸ் வரையில் மது அருந்தும் ஆண்களுக்கும் ஆறு கிளாஸ் வரையில் மது அருந்தும் பெண்களுக்கும் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1997 முதல் 2009ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3,33,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் 34 ஆயிரம் பேர் கடந்த எட்டு ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். இதில், மது பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும் ரெட் ஒயின் மிகக் குறைந்த அளவில் அருந்தியவர்களின் இறப்புவிகிதம் குறைவாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 25 சதவிகிதம் குறைவாம். இந்த ஆய்வு முடிவைப் பார்த்துவிட்டு குடிமகன்கள் யாரும் டாஸ்மாக் கடைக்கு படை எடுக்க வேண்டாம். நம் ஊரில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக குடிக்க ஆரம்பித்து, சோஷியல் டிரிங்கராக மாறி, கடைசியில் மானங்கெட்ட குடியில் வந்து நிற்கின்றனர். எனவே, மது குடித்தால் நல்லது என்ற ஆய்வு முடிவு எல்லாம் ஒயின் மட்டும் அருந்தும் வெளிநாட்டினருக்குத்தான். இந்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு யாரும் குடிக்க ஆரம்பிக்காமல் இருந்தால் சரி! ஆய்வு முடிவுதான் சொல்லிவிட்டதே என்று நம் ஊரில் கிடைக்கும் கண்ட கண்ட சரக்குகளை வாங்கி அருந்தினால், கல்லீரல், கணையம், சிறுநீரகம் என உடலில் உள்ள ஒவ்வொரு உள் உறுப்புமே பாதிக்கப்படும். கடைசியில் உயிரிழப்பு வரைக்கூட அது கொண்டு சென்றுவிடும். ஜாக்கிரதை குடிமக்களே!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.