கணையம் காக்க 7 வழிகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் உடலில் உள்ள சுரப்பிகளை நாளமுள்ள சுரப்பி, நாளமில்லா சுரப்பி என்று இரண்டாகப் பிரிக்கலாம். எச்சில் சுரப்பி, கல்லீரல் உள்ளிட்டவை எல்லாம் நாளமுள்ள சுரப்பி. ஒரு இடத்தில் உற்பத்தியாகி, குழாய் வழியாக பயணப்பட்டு மற்றொரு இடத்தை அடைகின்றன. தைராய்டு, அட்ரினல் உள்ளிட்டவை நாளமில்லா சுரப்பிகள். இவை உற்பத்தியான இடத்தில் இருந்து, ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணிக்கின்றன. ஆனால், கணையம் மட்டும் நாளமில்லா சுரப்பியாகவும் நாளமுள்ள சுரப்பியாகவும் இருக்கிறது. நம்முடைய உடலில் உள்ள மிக மென்மையான உள் உறுப்பு கணையம்தான். அது செரிமானத்துக்கு உதவி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த உதவி என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது. அப்படிப்பட்ட கணையம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா? அதற்கு செய்ய வேண்டிய 7 விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்... 1. உணவைச் செரிமானத்துக்கு பல என்சைம் எனப்படும் நொதிகளை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். 2. பீடி, சிகரெட் புகைப்பது நுரையீரலை மட்டும் பாதிப்படைய செய்வதில்லை... ரத்தக் குழாய் தொடங்கி கணையம் வரை எல்லா உள் உறுப்புக்களையும் பாதிக்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புகை கணையத்துக்கும் பகை. 3. உடல் பருமன் கூட கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும். 4. ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 5. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 6. கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 7. பித்தப்பை கல்கூட கணையத்தைப் பாதிக்கிறது. பித்தப்பையில் ஏற்படக்கூடிய கல், பித்தநாளம் வழியாக பயணிக்கும்போது பிரச்னை தொடங்குகிறது. அது சிறுகுடலுக்கு சென்றுவிட்டால் பிரச்னையில்லை. அதுவே, பித்த நாளத்தை அடைத்துக்கொள்ளும்போது கணையத்தையும் சேர்த்து பாதிக்கிறது. கல் அடைப்பு காரணமாக, கணைய நீரானது மீண்டும் கணையத்துக்கே திரும்புகிறது. கணையத்துக்குத் திரும்பிய நொதிகள், ஆக்டிவேட் ஆகும்போது, கணையத்தை அரிக்க ஆரம்பித்து, கணைய அழற்சியை ஏற்படுத்துகிறது. எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.