நல்லெண்ணெய் நன்மைகள் 10

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 15 Jan, 2018 08:39 pm

நம் காலகாலமாக பயன்படுத்தி வந்த நல்லெண்ணெய்க்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். முடி வளர்ச்சிக்கு உதவுதல், எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு உதவுதல், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை சீராக்குதல், மனப்பதற்றத்தைத் தவிர்த்தல், புற்றுநோய் செல்களை அழித்தல் உடல் முழுமைக்குமான ஆரோக்கியத் தீர்வை வழங்குவதில் நல்லெண்ணெய்க்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்று சொல்லலாம்.

முடி பராமரிப்புக்கு... பாரம்பரியமாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்று நம்முடைய பெரியவர்கள் சொல்வார்கள். நல்லெண்ணெய் தேய்ப்பது முடி உதிர்வைக் குறைக்கிறது. முடி இயற்கைப் பொலிவோடு இருக்க உதவுகிறது. மிகச்சிறந்த ஆன்டி பாக்டீரியலாக செயல்படுகிறது. இதனால், தலையில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்டவற்றை எதிர்த்து செயலாற்றி, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்னைகளில் இருந்து காக்கிறது.

சரும பராமரிப்பு... நல்லெண்ணெயில் துத்தநாகம் நிறைவாக உள்ளது. இது சருமத்துக்கு மிகவும் அவசியமான தாதுஉப்பு. இது சருமத்தின் நெகிழ்ந்து கொடுத்து பழைய நிலைக்குத் திரும்ப உதவும் தன்மையை கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. வயது அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய புள்ளிகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்கிறது. சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சில மருத்துவ முறைகளில் சருமத்தில் ஏற்படக் கூடிய பூஞ்சைத் தொற்றுக்கு நல்லெண்ணெய் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது... இதில் உள்ள நல்ல கொழுப்பு காரணமாக இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலத்துக்கு உறுதியைத் தருகிறது. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது. தொடர்ந்து நல்லெண்ணெய் பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவும் குறையும். இதனால், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

எலும்பின் உறுதியை அதிகரிக்கிறது... தாமிரம், துத்தநாகம், கால்சியம் ஆகிய மூன்று தாதுஉப்புக்கள் எலும்பின் உறுதிக்கு மிகவும் அவசியமானவை. இந்த மூன்றும் தேவையான அளவில் நல்லெண்ணெய் இருக்கிறது. நல்லெண்ணெய் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் எலும்பு உறுதியாகும், தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

சர்க்கரை நோய் மற்றும் செரிமான பிரச்னை... நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்னை வராது.

சுவாசக் கோளாறு... நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு அவசியமான தாமிரம் உள்ளதால், ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக கொண்டு செல்ல அது உதவும்.

ரத்த அழுத்தம்... நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்களுக்கு... தினமும் காலையில் நல்லெண்ணெயால் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அதாவது, வாயில் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும். அதாவது, எண்ணெயின் பிசுபிசுப்புத்தன்மை நீர்த்துப் போகும் வரையில் கொப்பளிப்பது நல்லது. இதனால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும். ஈறுகள் வலுபெறும்.

புற்றுநோய்... நல்லெண்ணெயில் மக்னீசியத்துடன் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

புரதம்... எள்ளில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் இதில் அளவுக்கு அதிகமான தரமான புரதச்சத்து உள்ளது. இது தசைகள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close