இழந்த ஆரோக்யத்தை மீட்டெடுப்போம்...

  கோமதி   | Last Modified : 24 Dec, 2018 08:07 pm

retrieving-lost-health

பழசுக்கு எப்போதுமே மவுசு உண்டு. உணவு கலாச்சாரங்களிலும் மேற்கத்திய பாணியைக் கடைப்பிடித்து இன்று பின்னங்கால் பிடற நம் பாரம்பரிய உணவு முறைக்கே திரும்பியிருக்கிறோம் என்பதைத்தான் ஆங்காங்கே நடக்கும் பாரம்பரிய உணவுத்திருவிழாவும்.... படையெடுக்கும் கூட்டமும் உணர்த்துகிறது. ஆனால் சமைக்கவே நேரமில்லை.. குழந்தைகளை வளர்க்கவும் நேரம் போதவில்லை என்று ஐந்து நிமிட  பாக்கெட் உணவுகளை வயிற்றுக்குள் திணித்து  உடல் உறுப்புகளைச் சேதமடைய வைத்து.. மருத்துவமனையைத் தேடுவதற்கு நேரம் செலவழிக்கத்தான் செய்கிறோம். இந்த டென்ஷனும்,மன உளைச்சலும் இல்லாமல் இயன்றளவு இயற்கையை நாடினால் இழந்த ஆரோக்யத்தை இயல்பாகவே மீட்டெடுக்கலாம். 

102 வயதில் நிமிர்ந்த நடையுடன் வீறுபோட்ட தாத்தாக்கள் .... 95 வயதிலும் தண்ணீர் குடத்தைச் சுமந்து ஆட்டுக்கல்லில் மாவரைத்த பாட்டிகள் வாழ்ந்த பூமியில்தான் நாமும் இன்று 25 வயதில் குனிய முடியாமல் நிமிர முடியாமல்  காலை மடக்க முடியாமல் உலாவருகிறோம். சமீப காலமாக 25 வயது கடக்கும் போதே பலருக்கு மூட்டுவலியும் சிலருக்கு எலும்புத் தேய்மானமும் இருக்கிறது என்று மருத்துவ அறிக்கைகள் சொல்வதை அச்சுபிறழாமல் கேட்கிறோம். உடல்பருமன் என்னும் ஒபிசிட்டி தான் காரணம் என்பதையும் வேதவாக்காக ஏற்று,உடற்பயிற்சி கூடங்களில் உடலை ஒப்படைக்கிறோம்.ஆட்டுக்கல்லையும், அரவை இயந்திரத்தையும் விட்டு, இயந்திரத்திடம் நம்மை ஒப்படைத்து நோயை வரவேற்று உபசரித்திருக்கிறோம். 

நம் உடலின் சதைப்பகுதி உள்ளே இருக்கும் எலும்பின் வலு வலிமையாக இருந்தால்தான் நம்மால் சோர்வின்றி ஓட முடியும். மூட்டுவலியை முற்றிலும் தவிர்க்க முடியும். இதற்கு  சத்து மாத்திரைகளும், சத்தான உடற்பயிற்சியும் தேவையில்லை. வேலி ஓரங்களில் இருக்கும் 10 பிரண்டை துண்டுகள் போதும்.   மூட்டுவலி வராமல் தடுக்கவும்,வலி அதிகரிக்காமல் இருக்கவும் பிரண்டை போதும்.மெனோபாஸ் வயதை அடையும் பெண்கள் கால்சியம் பற்றாக்குறையால் திணறும்போது பாதிப்படைவது எலும்புகள் தான். பாரம்பரிய உணவை மீட்டெடுத்தால் இழந்துவரும் நம் ஆரோக்யத்தையும்  மீட்கலாம். பிரண்டையைக் குழம்பாக்கி, பொடி செய்து, துவையலாக்கிச் சாப்பிடலாம். 

தேவையான பொருள்கள்: 

நார் எடுத்து நன்றாக சுத்தம் செய்த இளம் பிரண்டை -1 கப் (பிரண்டையைச் சுத்தம் செய்யும் போது  உள்ளங்கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்வது நல்லது. கைகளில் அரிப்பு இருக்காது)  கறுப்பு எள்- அரை சிறிய தேக்கரண்டி, உ.பருப்பு - அரை தேக்கரண்டி, வரமிளகாய் -காரத்துக்கேற்ப, புளி-சிறு எலுமிச்சையளவு, பூண்டு-1 கைப்பிடி,பெருங்காயம் -அரை டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உ.பருப்பு, எள், வரமிளகாய், பூண்டு, புளி, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு நறுக்கிய பிரண்டைத் துண்டுகளைப் போட்டு மிதமானத் தீயில் அதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும். ஏற்கனவே வதக்கிய பொருள்களைச் சேர்த்து ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும். இப்போது ருசியான பிரண்டை-எள் துவையல் தயார். சூடாக வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தத் துவையல் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி,தோசை போன்றவற்றுக்கும் ஏற்றது. 

பிரண்டை நன்மைகள் 

உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை பிரண்டைக்கே உரியது.பெண்களுக்கு மாத விடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி ஆகியவற்றுக்கு கை கண்ட மருந்து. நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை மாத்திரை விற்கப்படுகிறது. பிரண்டை நமது இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.இதயம் பலப்படும். பிரண்டையை  வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலம் பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் பிரண்டையைச்  சேர்க்கலாம். கீரை விற்பவர்களிடமும், மார்க்கெட்டில் இருக்கும் கீரை கடைகளிலும் பிரண்டையைக் கேட்டு வாங்குங்கள்.  

நடந்தாலே ஓடுவது போல் இருக்கும் நம் தாத்தாக்களையும்... நாம் ஓடினாலே நடப்பது போல் இருக்கும் இன்றைய நிலையையும் என்னவென்று சொல்வது?         

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.