இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Jan, 2018 08:01 pm

சந்தையில், பழக்கடையில், சூப்பர் மார்க்கெட்டில் நாம் பார்க்கும் பழங்களில் மறைந்திருக்கும் பலன்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக, தாது உப்புக்கள் புதையலாக அதை சரும மருத்துவர்களும், அழகுக்கலை நிபுணர்களும், ஆய்வாளர்களம் பார்க்கின்றனர். இவை நம்முடைய ஆயுளைக் கூட்டுகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. உண்மையில் ஆயுளை மட்டுமல்ல நம்முடைய அழகையும் கூட்டுகின்றன என்கிறது ஆய்வு ஒன்று. இந்தப் பழங்களில் மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொண்டால், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடப் பழங்களை ஈக்களைப் போல மொய்க்கத் தொடங்கிவிடுவார்களாம். 


ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள ஒரு வகையான நார்ச்சத்து, தலைமுடியின் பி.எச் அளவைப் பராமரிக்க உதவுகிறதாம். இதைத் தலையில் தடவி வந்தால் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இதில் உள்ள மாலிக் அமிலம் சருமம் இளமையாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள மாலிக் அமிலம் இன்றைக்குப் பல அழகு க்ரீம், சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. 


அவகேடோ அல்லது பட்டர் ஃபுரூட்டில் சருமம் மற்றும் அழகு வைட்டமின் என்று அழைக்கப்படும் பயோட்டின் உள்ளது. இது சருமம் புத்துயிர் பெற உதவுகிறது. இதில் சருமத்தின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும் வைட்டமின் இ நிறைவாக உள்ளது. இந்தப் பழத்தில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்துக்குத் தேவையான இயற்கை வழுவழுப்பு எண்ணெய்யை வழங்குகிறது. இதனால், சருமம் இளமையுடனும் பொலிவுடனும் இருக்கும். 


வாழைப் பழத்தில் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதுடன் சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இதில், வைட்டமின் ஏ, பி, இ நிறைவாக உள்ளது. இது சருமத்துக்கு எலாஸ்டிசிட்டியை தருகிறது. வயதுக்கு மீறிய சுருக்கம், புள்ளிகள் போன்றவற்றைத் தவிர்க்கிறது. மேலும், சருமத்துக்குப் புதுப்பொலிவை தருகிறது. 


கிவி பழத்தில் அதிக வைட்டமின் சி உள்ளது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக வைட்டமின் சி கிவி பழத்தில் உள்ளது. இது சருமத்தை இளமையுடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்க உதவுகிறது. 


பப்பாளி பழத்தை இன்றைக்கு அனைத்து சரும பராமரிப்பு க்ரீம் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. ஃபேஷியல் பேக், சோப், க்ரிம் என்று பல விதங்களில் ரசாயன கலப்புடன் பப்பாயா க்ரீம் வருகிறது. இதற்குப் பதில், இயற்கை பப்பாளியையே நீங்கள் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின், பாப்பின் என்ற என்சைம் உள்ளன. பாப்பின் செரிமானத்தைச் சீராக்குகிறது. நொதிக்கப்பட முடியாத புரதத்தைக் கூட நொதிக்கச் செய்ய உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டும் கூட. சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சரி செய்து, புத்துயிர் ஊட்டுகிறது.


மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதில், அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. சருமத்தில் ஏற்படக் கூடிய ஃப்ரீராடிக்கல் பாதிப்பில் இருந்து காத்து இளமையை தக்க வைக்கிறது. புறஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைக் காக்கிறது. சருமத்தின் அடிப்பகுதியான டெர்மிஸ், எபிடெர்மிஸ் திசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.