ஜூஸ் குடிக்க எது சரியான முறை?

  Shalini Chandra Sekar   | Last Modified : 30 Mar, 2018 06:39 pm


காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் 'அதைக் குடித்தால் நல்லது, இதைக் கடித்தால் நல்லது' என பக்கத்து வீட்டு பாட்டி முதல் நம்மில் பாதியாக நினைத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் வரை பலரும் பலவிதமாக சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். இப்போது வெயில் காலம் வேறு தொடங்கி விட்டது எல்லோரும் நிறைய ஜூஸ் குடிக்கச் சொல்கிறார்கள். ஆனால் எந்தப் பழங்களை ஜூஸாக்கி குடிக்க வேண்டும், எதை எதனுடன் சேர்த்துக் குடிக்க வேண்டும், அப்படியே ஏன் பழங்களை கடித்து சாப்பிட வேண்டும் என பல கேள்விகள் நம்முள் எழ, உடனே இயற்கை நல மருத்துவர் ஒய். தீபா அவர்களைத் தொடர்புக் கொண்டோம். 

``ஜூஸ் சாப்பிடுவதுபற்றி நிறைய தகவல்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எந்த நேரத்தில், எப்படி குடிக்க வேண்டும் என்ற நியதிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளை சமைத்துச் சாப்பிடுவதால் அவை உயிரற்றதாகிவிடும். அதனால் அவற்றில் உள்ள சத்துகள் அனைத்தையும் இழக்க நேரிடும். ஆகவே  ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துகள் ஒரு சதவிகித இழப்புகூட இல்லாமல் வேகமாகக் கிடைக்கும். 

எந்தவொரு ஜூஸும் உடனடியாக புத்துணர்ச்சி தரக்கூடியதே. பழங்களில் இயற்கையான இனிப்புச்சத்து இருப்பதால் அவற்றுடன் வெள்ளைச்சர்க்கரை போன்ற இனிப்புகள் வேண்டாம். இனிப்பு தேவையென்றால் பேரீச்சம்பழம், தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். இவை பழச்சாறுகளில் காரத்தன்மையை சமநிலைப்படுத்தி சத்துகள் விரைவாக கிடைக்க உதவும். இயற்கை இனிப்புகள் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்றவை உடலில் சேர உதவும். மாறாக வெள்ளைச் சர்க்கரை சேர்த்தால் சத்துகள் எதையும் சேரவிடாமல் எலும்புகளை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் எலும்புத் தேய்மானம் ஏற்படும். 

பழ ஜூஸ்களில் பாலை சூடு பண்ணாமல் பச்சையாகவே சேர்க்கிறார்கள். அதிலும் பாக்கெட் பாலில் உள்ள பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த முடியாது. இவை அல்லாமல் பச்சைப்பால் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்; உடல் பருமனை ஏற்படுத்துவதுடன் அதிக அளவில் கொழுப்பைச் சேர்த்துவிடும். பால் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். இதனால் காரச்சத்துகள் அப்படியே கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.


பொதுவாக ஜூஸ் செய்யும்போது பழமோ, காயோ எதுவாக இருந்தாலும் தனித்தனியாக ஜூஸ் செய்து சாப்பிடுவதே நல்லது. அப்படியானால்தான் அதனதன் தனித்தன்மை கிடைக்கப்பெறும். விருப்பப்பட்டால் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம். எதனுடன் எது சேர்க்க வேண்டும் என்ற ஒரு நியதி இருக்கிறது. கூடுதல் சத்து கிடைக்க வேண்டும் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்று பால், சர்க்கரையைச் சேர்த்தால் அதில் அசிட்டிக் அமிலம் சேர்ந்துவிடும். இதில் காரத்தன்மை அதிகமாக இருந்தாலும் அமிலத்தன்மை அதிகரித்துக் காணப்படும். இதனால் உடலில் வேறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஃப்ரெஷ் ஜூஸ் அனைத்துமே உடல் உறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவிபுரியும். பழங்கள், காய்கறிகள், இலைக்காய்கறிகள், முளைகட்டிய பயறுகள், முள்ளங்கி, கேரட் போன்ற வேர் வகைக் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நோய்களிலிருந்து விடுதலை பெற உதவும். சத்துக்குறைபாடுகள் ஏற்படாமல் காப்பதுடன் அவற்றிலிருந்து விடுபட உதவும். செல்கள், உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க ஃப்ரெஷ் ஜூஸ் உதவும்.

ஒவ்வொரு பழத்துக்கும் நிறம் தரக்கூடிய பைட்டோகெமிக்கல்கள் இருப்பதால் அவை குறிப்பிட்ட உறுப்புகளுக்கு சத்துகளை கொண்டுபோய் சேர்க்கும். தக்காளி, மாதுளை  உள்ளிட்ட சிவப்பு நிறப் பழங்களில் லைக்கோபீன் நிறைந்திருக்கிறது. ஆகவே இதுபோன்ற பழங்களில் ஜூஸ் செய்து சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பீட்ரூட்டை ஜூஸாக்கிக் குடிப்பதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். 

கறுப்புத் திராட்சை போன்ற பழங்கள் இனிப்பு நிறைந்தவை. ஆப்பிள், ப்ளம்ஸ், செர்ரி, பேரிக்காய் போன்றவற்றில் சிறிது அமிலத்தன்மை இருந்தாலும் அது பாதிப்பு ஏற்படுத்தாது. அமிலம் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலம் உள்ளது.

காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், என்ஸைம், புரதம், மாவுச்சத்து, குளோரோபில் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைய கிடைக்கின்றன. காய்கறிகளில் அபரிமிதமான எனர்ஜி உள்ளது. காய்கறிகளில் ஜூஸ் செய்து சாப்பிடுவதால் நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். நூல்கோல் ஜூஸ் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன் ரத்தச்சோகையைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் நூல்கோல் ஜூஸ் நல்லது. காய்கறிகளைச் சூடுபடுத்துவதால் அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் முழுமையாக அழிந்துவிடும். ஆனால் ஃப்ரெஷ் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட் மட்டுமல்லாமல் பைட்டோகெமிக்கல்கள் இருப்பதால் அவை நிறைய நோய்களைக் குணப்படுத்துகின்றன. 

எதனுடன் சேர்த்துச் சாப்பிடுவது?


தக்காளி, வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்றவற்றில் வெஜிடபிள் ஜூஸ் செய்யலாம். இவற்றுடன் ஏதாவது ஒரு பழத்தைச் சேர்த்து ஜூஸ் ஆக்கிச் சாப்பிடலாம். பசலைக்கீரை, முட்டைக்கோஸ், வல்லாரை, செலரி போன்ற இலைக்காய்கறிகளை ஜூஸ் செய்து சாப்பிடலாம். இவற்றுடன் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிடலாம். பீட்ரூட், கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்ற வேர் வகைக் காய்கறிளையும் ஜூஸ் செய்யலாம். ஆனால் இவற்றுடன் வேறு எதையும் சேர்க்கக்கூடாது. இவற்றை தனியாகவே ஜூஸ் செய்ய வேண்டும்.

இனிப்பான பழங்களுடன் சிறிது அமிலம் உள்ள பழங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றுடன் காய்கறிகளையோ, வேர்க் காய்கறிகளையோ சேர்க்கக் கூடாது. சிறிது அமிலம் உள்ள  இனிப்புப் பழங்களுடன் அதிக அமிலம் உள்ள பழங்களைச் சேர்க்கலாம். காய்கறிகள், வேர்க் காய்கறிகளைச் சேர்க்கக்கூடாது. அதிக அமிலம் உள்ள பழங்களுடன் சிறிது அமிலம் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேர்க்கலாம். 

காய்கறிகளுடன் இலைக் காய்கறிகள், அமிலம் உள்ள பழங்களைச் சேர்க்கலாம். இவற்றுடன் வேர்க் காய்கறிகள், சிறிது அமிலம் உள்ள பழங்களைச் சேர்க்கக்கூடாது. இலைக்காய்கறிகளுடன் எந்தவொரு பழங்களையும் சேர்க்கக்கூடாது. காய்கறிகள், வேர்க்காய்கறிகளைச் சேர்க்கலாம். இதுபோல் சரியான காம்பினேஷன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை நோய்களுக்கேற்ப கொடுக்க வேண்டும்.

என்னென்ன சத்துகள்?

பழங்களைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொருவிதமான சத்துகள் இருக்கின்றன. ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற சத்து உள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை சரியாகும். அர்சாலிக் (Ursolic) என்ற ஆசிட் இருப்பதால் மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும்.  கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். பித்தப்பையில் கல் சேராமல் பார்த்துக் கொள்ளும். புற்றுநோய் வராமல் தடுப்பதுடன் நுரையீரல் புற்று வராமலும் தடுக்கும். இதயநோய் வராமல் தடுப்பதுடன் இதய நோய் பாதிப்பை சரி செய்யும்.

மஞ்சள் நிறப் பழங்களான ஆரஞ்சு, கேரட், பூசணி, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றில் பீட்டா கரோட்டின் (beta carotene), பெக்டின் (Pectin) என்னும் கரையும் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், புரோவிட்டமின் (provitamin) போன்றவை அதிகமாக உள்ளன. இத்தனை சத்துகள் நிறைந்த இந்த பழங்களின் சாறுகளை அருந்துவதால் புற்றுநோயை தடுக்கலாம். குறிப்பாக மார்பகப் புற்று, நுரையீரல் புற்று போன்றவற்றைக் கட்டுப்படுத்தி நோய் பரவாமல் காத்துக் கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் செல்கள் பழுதாகாமல் பார்த்துக் கொள்ளும். நரம்புகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும். அதிக கொழுப்பு, ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, சொரியாசிஸ் போன்றவற்றை சரி செய்வதுடன்  கர்ப்பகாலங்களில் வரக்கூடிய இரும்புச்சத்துக் குறைபாடுகளைப் போக்கும். பீட்டா கரோட்டின் சளி, இருமலைக் குணப்படுத்துவதுடன் செரிமானக் கோளாறுகளை சரி செய்யும்.

கோதுமைப்புல், பசலைக்கீரை, வெள்ளரி, அறுகம்புல் போன்ற பச்சை நிறச் சாறுகளில் குளோரோபில் நிறைந்திருக்கிறது. இது மனித உடலில் உள்ள ஹீமோகுளோபினுக்கு நிகரானது. காயங்களை ஆற்றுவதுடன் ரத்தத்தை சுத்திகரித்து நச்சுகளை வெளியேற்றக்கூடியது. இவற்றின் என்சைம்கள் நிறைந்திருக்கின்றன. மெட்டபாலிசத்தைத் தூண்டிவிட்டு எடை குறைக்க உதவும். அமிலத்தன்மை இல்லாததது. காரத்தன்மை சமச்சீராக இருக்க உதவும். பெப்டிக் அல்சர் ஏற்படாமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

இளநீர் பொட்டாசியம், குளோரின், கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இளநீரை அருந்துவதால் உடல் சூடு குறையும். இயற்கை இனிப்புச் சத்து நிறைந்த இளநீர்  தாதுக்களை சரி செய்து குடல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். காலரா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை சரி செய்வதுடன் முதுமையில் சோர்ந்து போகாமல் எழுந்து உட்கார வைக்க உதவும். சிறுநீரகக் கல் பிரச்னைகளை சரி செய்யும்.

எந்த நோய்க்கு என்ன ஜூஸ்?


ரத்தச்சோகை இருந்தால் பீட்ரூட், பசலைக்கீரை, ஆப்பிள், கேரட், எலுமிச்சை, உலர்ந்த திராட்சை, முளைகட்டிய பயறு போன்றவற்றில் எதையாவது தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. 

வாதக் கோளாறுகளுக்கு அன்னாசி, பப்பாளி, பாகற்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, வேப்பம்பூ போன்றவற்றில் எதையாவது தனியாக ஜூஸ் செய்து குடிக்கலாம். 

அமிலம் அதிகமாக இருந்து நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு இருந்தால் வெள்ளரி, ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடலாம். 

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், தர்பூசணி, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, பசலைக்கீரைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம். முகப்பரு தொல்லைக்கு வெள்ளரி,பப்பாளி, எலுமிச்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் பழங்களின் செய்த ஜூஸ் நல்லது. 

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, ஆப்பிள், கேரட், வெங்காயம் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம். 

உடல்பருமன் உள்ளவர்கள் தக்காளி, கேரட், வெண்பூசணி, சுரைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றின் ஜூஸ்களை அருந்துவது நல்லது. 

மெனோபாஸ் காலங்களில் கேரட், பீட்ரூட், வெள்ளரி, மாதுளை, அத்தி, பேரீச்சை போன்ற பழங்களின் ஜூஸ்களை அருந்தலாம். 

உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுகளை வெளியேற்ற கோதுமைப்புல், அறுகம்புல், கேரட், பீட்ரூட் மற்றும் எல்லா பச்சைநிற காய்கறிகள் ஜூஸ்களை குடிக்கலாம். 

தசைப்பிடிப்பு விலக செலரி, தண்டுக்கீரை ஜூஸ், இளநீர் குடிக்கலாம்.

ரெடிமேடு ஜூஸ் அருந்துவதால் உடல் நலத்துக்கு நல்லது, உடலுக்கு ஊக்கம் தருகிறது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 100 சதவிகிதம் தவறானது. ரெடிமேடு ஜூஸ்களில் வெள்ளைச் சர்க்கரை, உப்பு, குளோரின், நிறமூட்டிகள், கார்ன் சிரப் (corn syrup), கஃபெய்ன் (caffeine), ஃப்ளூரைட் (fluoride) உள்ளிட்ட வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் கெட்டுப்போகாமலிருப்பதற்காக பதப்படுத்தப்படுகிறது. இதனால் உடலில் உள்ள மியூக்கஸ் லேயர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே இயற்கை பழச்சாறுகளே நல்லது. இவை உடல்நிலையை சமச்சீராக வைத்திருக்க உதவும். 

பழங்களை அப்படியே சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்கும். ஆனால் ஜூஸ் ஆக்கிக் குடிப்பதால் நார்ச்சத்து கிடைக்காது என்றாலும் மற்ற அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அத்துடன் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்.

ஜூஸ் எப்போது குடிக்கலாம் என்பது தெரியாமலேயே கண்ட கண்ட நேரங்களில் குடித்துக் கொண்டிருக்கிறோம். உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் ஜூஸ் அருந்துவதே நல்லது. உணவுக்குப் பிறகு ஜூஸ் அருந்தக்கூடாது. உணவு உண்ணும்போதோ, உணவு உண்டதுமோ தண்ணீர் அருந்துவது என்பதே ஏற்புடையதல்ல. உணவு உண்டு அடுத்த ஒரு மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும்.  ஆகவே கண்ட நேரத்திலும் ஜூஸ் குடிப்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன் தலைவலி, வாந்தி ஏற்படலாம்.


ஜூஸ் - ஸ்மூத்தி


பழங்களை அரைத்து சாறாக்கி வடிகட்டிக் குடித்தால் அது ஜூஸ். சாறாக்கப்பட்டதும் வடிகட்டாமல் அப்படியே குடிப்பதுதான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தியில் கரையும், கரையா நார்ச்சத்துகள் இரண்டும் நிறைந்திருக்கும். நார்ச்சத்து நிறைந்த ஸ்மூத்தியை அருந்துவதால் வயிறு நிறைந்த திருப்தி இருக்கும். இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். செரிமான மண்டலத்தை சரியாக வழிநடத்தும். 

கரையும் நார்ச்சத்துகள் கொலஸ்ராலின் அளவைக் குறைக்கும்; மாவுச்சத்துகளை மெதுவாக கிரகிக்கும். ஆப்பிள், பிளம், பேரிக்காய் போன்றவற்றில் கரையும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. 

கரையாத நார்ச்சத்துகள் குடலில் இருக்கும் நீரை மலத்துடன் வெளியேற்றும். வெள்ளரிக்காய், கேரட், தண்டுக்கீரை, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன.


மில்க்‌ஷேக்


மில்க் ஷேக் - ஸ்மூத்தி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மில்க் ஷேக்கில் பால் சேர்க்கப்படுகிறது. ஆனால் பழங்களுடன் பால் சேர்க்கப்படுவதால் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் தேங்காய்ப்பால் சேர்ப்பதே நல்லது.'' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close