விளக்கெண்ணெய்... மகத்துவம் நிறைந்தது!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 07:50 pm
benefits-and-uses-of-castor-oil

`அவன் கெடக்கான் வெளக்கெண்ணெய்...  அவரு... சரியான வெளக்கெண்ணெயாச்சே... - விளக்கெண்ணெய் என்றால் இப்படி ஒருவரை இளக்காரமாக, இகழ்ச்சியாக விமர்சிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. ஆனால் உண்மையில் விளக்கெண்ணெய் மகத்துவம் நிறைந்தது, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. ஆகவே இனிமேல் உங்களை யாராவது வெளக்கெண்ணைன்னு திட்டினால் மகிழ்ச்சியாக இருங்கள்; ஆனந்தம் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் castor oil எனப்படும் விளக்கெண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெயாகும். மற்ற எண்ணெய்களைவிட அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால், சற்று பிசுபிசுப்புத்தன்மையுடன் காணப்படும். விளக்கெண்ணெய் குளிர்ச்சியூட்டக்கூடியது. கிராமப்புறங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். காலையில் சூடான டீ அல்லது காபியில் விளக்கெண்ணெய் கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும்.

இந்த விளக்கெண்ணெயை எளியமுறையில் வீடுகளில் தயாரிக்கிறார்கள். ஆமணக்கு விதைகளை வெயிலில் காய வைத்து உரலில் போட்டு நன்றாக இடிக்கவேண்டும். கிட்டத்தட்ட பசை போல மாறிவிடும். பிறகு பானை ஒன்றில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளற வேண்டும்.

அடுப்பில் தீயை நிதானமாக எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்கும். அதை சிறிது சிறிதாகக் கரண்டியால் எடுத்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்த எண்ணெயுடன் சிறிய அளவில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். `சடசட என்ற சத்தத்துடன் நீர் மெதுவாக வற்றும். நீர் முழுவதுமாக வற்றியதும் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி எடுத்து பாட்டில்களில் அடைத்துப் பயன்படுத்தலாம்.

இயற்கையான முறையில் கண் மை தயாரிக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது. இப்படிக் காய்ச்சி எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்தான் விளக்கெண்ணெய் எனப்படுகிறது. வெறும் ஆமணக்கு விதைகளை நசுக்கிக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய்கூட மருந்தாகிறது. கைகாலை இடித்துக் கொண்டு வலி ஏற்பட்டால் ஆமணக்கு இலையை வதக்கி அடிபட்ட இடத்தில் சூட்டோடு சூடாக வைத்து வெள்ளைத்துணி வைத்து கட்டி விடுவார்கள். இதனால்தான் `ஆமணக்கே போற்றி போற்றி விளக்கெண்ணெய்யே போற்றி போற்றி... என்று ஒரு பாடல்கூட எழுதப்பட்டிருக்கிறது.

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது. குறைந்தது 70 ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சில துளி விளக்கெண்ணெய் விட்டாலே அடுத்த நொடியை குழந்தை அழுகையை நிறுத்திவிடும். காரணம் சூடு மற்றும் வாயுக் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடியது இந்த விளக்கெண்ணெய் வைத்தியம். தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் .

கம்ப்யூட்டர் , மொபைல் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் ஓர் வரப்பிரசாதமாகும். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் தீரும், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை நீங்கும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்கு குளிர்ச்சி தரும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும். மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அப்போது அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவி அதன்மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்று வலி குறையும். மேலும் பொதுவாக பருவமடைந்த பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close