ஆரோக்கியம் + அழகு = பப்பாளி

  கோமதி   | Last Modified : 04 Dec, 2018 01:40 pm

health-beauty-papaya

உணவே மருந்து என்ற நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க நாம் தினமும் பழங்களைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதற்காக விலை அதிகமுள்ள ஆப்பிள், உலர் வகை பழங்கள் தான் சாப்பிடவேண்டுமென்பதில்லை. அனைத்துப் பழங்களையும் சரி விகித அளவில் சுழற்சி  முறையில் எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும்  சரியான அளவு கிடைக்கும்.நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று  பப்பாளிப் பழம். விலையும் குறைவு... சத்தும் அதிகமாக இருக்கும். மிக மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.  வாரத்துக்கு இரண்டு முறை பப்பாளியை சேர்த்துக்கொண்டால்  நோய் நம்மை விட்டு தள்ளி நிற்கும். பப்பாளி மரம் எல்லா சூழ்நிலையிலும் நன்றாக வளரக்கூடியது. அதிகம் பாதுகாத்து வளர்க்கவேண்டிய தேவையும் இதற்கு இருக்காது. ஆனால் பலன் அதிகமாக இருக்கும். சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும்  பப்பாளி பழத்தில் வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம்  என்று நிறைய சத்துகள் உள்ளன.  

உடல் பருமனைக்  குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால்  விரைவில் நல்ல பலன் தெரியும். வெளிநாட்டினர் பப்பாளியின் விதைகள் முதல் அதன் மரம் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். பப்பாளி மரத்தின் இலையில் குளிக்கும் சோப் தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். விலை உயர்ந்த ஆப்பிளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கூட நாம் பப்பாளிக்குக் கொடுப்பதில்லை. இதில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி பார்க்கலாமா?

பப்பாளியில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற சத்து புற்றுநோய் ஏற்படுவதைத்  தடுக்கிறது.

குழந்தைகளுக்கு வளரும் வயதிலிருந்தே பப்பாளியைக் கொடுத்து வந்தால் வைட்டமின் ஏ குறை பாட்டால் வரும் கண் பார்வை  சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது. உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல்,எலும்பு வலுவடைய உதவும். நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளிப்பழம் இரத்த விருத்திக்கும் உறுதுணையாக இருக்கிறது. இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை அகற்றும். இரத்த சோகை என்னும் நோயைக்  குணப்படுத்தும்.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கக் கூடிய அற்புதமான சத்து பப்பாளியில் உண்டு.பப்பாளிப் பழத்தில் உள்ள சர்க்கரை நேரிடையாக இரத்தத்தில் கலப்பதில்லை. அதனால் இதை  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அளவாக எடுத்துக் கொள்ளலாம். 

பப்பாளிப்பழம் செரிமான நோய்களைக் குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவு. பப்பாளிக்காயைச்சாறு அரைத்துக் குடித்தால்  வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
பப்பாளிக்காயில் உள்ள பாலினை காயம் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும்.  இதன் இலையை அரைத்து கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். வீக்கம் வற்றும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும். பப்பாளிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரில் காயாகவும் போடலாம்.

அழகு சேர்க்கும் பப்பாளி:

வறண்ட சருமம் உடையவர்கள்  பப்பாளி பழத்தைக் கூழாக்கி முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக பத்து நிமிடம் மசாஜ் செய்து, மிதமான  வெந்நீரால் முகம் கழுவினால் முகம் பளிச்சென மின்னும். பப்பாளிக்கு வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற சக்தி  உண்டு.

முகச்சுருக்கம் அதிகம் இருப்பவர் கள் நன்றாக பழுத்த பப்பாளிப் பழத்தைக் கூழ் போல் பிசைந்து சுத்தமான தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச்சுருக்கம் நீங்கி  முகம் பொலிவடையும். அவ்வப்போது இவ்வாறு செய்யும் போது நமது முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.