வளரும் குழந்தைகளுக்கு முதலில் இதை சொல்லிக் கொடுப்போம்

  கோமதி   | Last Modified : 19 Dec, 2018 12:24 pm

we-should-teach-this-first-to-growing-up-children

நல்லா இருக்கியா என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்ற பதிலை விட நல்லாதான் இருக்கேன் என்று ‘தான்’ -க்கு ஒரு ஃ ன்னா கொடுத்தே பேசுவதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும் உடல்நலத்தில் ஏதோ பிரச்னை என்று.  சிறு குழந்தைகளிடம் என்ன சாப்பிட்டாய்  கண்ணா என்று ஆரம்பித்து   ஃபாஸ்ட்ஃபுட் வேண்டாம்.. பதிலாக காய்கறிகளையும், தானியங்களையும் சாப்பிடு என்றும்.. ஆண் களிடம் அதிக எண்ணெய்  ஆகாது உடலுக்கு.. வயது ஏற ஏற இந்த நோய் வரும்.. அந்த நோய் தாக்கும் என்றும்.. இல்லத்தரசிகளிடம்  ஆரோக்யமான உணவைதானே  சமைக்கிறாய் என்றும் வயதுக்கேற்ற கேள்விகளை கேட்க தவறுவதில்லை அனுபவசாலிகள். ஆனால் அவர்களும் கற்றுத்தர வேண்டிய பாடம் என்ன சாப்பிட்டாய்? எவ்வளவு சாப்பிட்டாய்? என்பதை விட எப்படி சாப்பிட் டாய் என்பதுதான்..

30 வருடங்களுக்கு முன்பு விடுமுறையில் தாத்தா- பாட்டி வீட்டுக்குச் சென்றால்  நம் வாயை அரவை இயந்திரமாக்கிவிடுவார்கள். மணிக்கு ஒரு பலகாரம் தந்து உபசரிப்பதோடு உண்ணும் ஒவ்வொரு கவளமும் சரியாக செல்கிறதா என்ற சவரட்சனைதான் அதிகமாகயிருக்கும். பெரும்பாலும் “ சாப்பிடும் போது பேசக்கூடாது கண்ணு,  உடம்பில் ஒட்டாது” ”பொறுமையா சாப்பிடு அப்போதான் செரிமானம் ஆகும்...” ”சாப்பிடும் போது தண்ணிக்குடிக்காத புள்ள வயிறு நிறைஞ்சிடும்...” ” ஓடி ஆடி விளையாடற வயசு..இன்னும் கொஞ்சம் சாப்பிடு தாயி...”  இப்படிப்பட்ட வசனங்களைக் கேட்காமல் 40 வயதைக் கடந்தவர்கள் வளர்ந்திருக்க மாட்டோம்.

கல்வியில் சிறந்து  தலைச்சிறந்த மருத்துவராய் புகழ்பெற்றிருக்கும் இன்றைய மருத்துவர்கள் சொல்வதும் இதைத்தான். அப்பத் தாவும், அம்மாச்சியும் எந்த மருத்துவமும் படிக்கவில்லை, ஆனால் உடல் உறுப்புகளைப் படித்து வைத்திருந்தார்கள். வாயை மூடியபடி சாப்பிட்டால் தான் உமிழ்நீர் உணவோடு கலந்து செரிமானத்தைச் சுலபமாக்கும் என்ற உண்மையை உணர்ந்திருந்தார்கள். அன்றைய தலைமுறையினர் ஆரோக்கியத்தை மட்டுமே சுவைத்துச் சுகமாக வாழ்ந்தார்கள். நெய்ச்சோறும், கூட்டாஞ்சோறும் கொடுத்த வனப்பை இன்று ஆரோக்யம் தரும் என்று கூவி கூவி விற்பவர்களிடம் வலிய சென்று விலை கொடுத்து வாங்கினாலும் கிட்டவில்லை. இயற்கை யிலிருந்து செயற்கைக்கு மாற தொடங்கியபோதே ஆரோக்யத்திலும்  ஆர்வம் குன்றிபோயிற்று. 

ஐவிரல்கள் இணைந்து ஒன்றுடன் ஒன்று பிணைந்து சோற்றை உருட்டி இலாவகமாக வாயில் போடும் அழகை  இன்றைய தலைமுறையினர் விசித்திரமாக பார்க்கின்றனர். விரல்படாமல் உதடு நனையாமல் வாய்க்குள் செல்ல அவர்களுக்கு நிச்சயம் ஒரு கரண்டி தேவைப்படுகிறது. ஒரு வயது குழந்தைகளுக்கு இட்லியைப் பிட்டு தட்டில் வைத்தால் வாயைத்தவிர விரல்களிலும் முகத்திலும் பூசிக்கொண்டு உணவை ருசிப்பார்த்த அன்றைய குழந்தைகள் இன்று தம் சந்ததியினருக்கு ஏப்ரானும்.. எடுத்து சாப்பிட ஸ்பூனும் கொடுத்து  நாகரிகம் என்று பழக்கிவருகிறார்கள். பிஞ்சு விரல்கள் உணவை எடுத்து பழகுவது உடலுக்கான பயிற்சிதான் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறோம். இப்போதெல்லாம் சாப்பிடும்போது தொலைக்காட்சியிலும் செல்ஃபோனிலும் இருக்கும் கவனம் உணவில் இருப்பதில்லை. என்ன சாப்பிடுகிறோம் என்பதே தெரியாத அளவுக்கு பொழுது போக்கில் மூழ்கியிருக்கும் நாம் உணவை மென்று விழுங்கினோமோ என்பதை மட்டும் எப்படி நினைவில் கொள்வது. 

அரைமணிநேரத்தில் அவசர சமையலும்.. ஐந்து நிமிடத்தில் தொண்டைக்குள் செல்லும் தட்டு உணவும் எப்படி ஆரோக்யமானதாக இருக்கும். குறைந்தது 15 நிமிடங்களாவது உண்ணும் நேரம் இருக்க வேண்டும். உண்ணும்போது மெளன மாக உண்ணவேண்டும். உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி உண வில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடும்போது எவ்விதமான பிரச் னைகளையும், குழப்பங்களையும் எண்ணக்கூடாது. திரவ உணவாக இருந்தாலும், திட உணவாக இருந்தாலும் ஒவ்வொரு கவளமும் தொண்டைக்குள் செல்லும் முன் உமிழ்நீருடன் கலந்து குழைந்த பிறகே செல்ல வேண்டும்.  

இனியாவது வளரும் குழந்தைகளுக்கு முதலில் உணவை எப்படி சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுங்கள். டீவி முன்பு அமரவைத்து பழகாமல் உங்கள் அருகாமையில் அமரவைத்து சாப்பிடச்செய்யுங்கள். உணவு செரிமானம் ஆவதில் ஏற்படும் பிரச்னைதான் பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறது மருத்துவம். உணவை உணவாக அளவாக மென்று  சாப்பிடுங்கள். நீங்கள் ஒரு வாரம் இதைக் கடைப்பிடித்தாலே உடல் நலனில் தென்படும் மாற்றம் உங்களை ஆச்சரியப்படுத்தும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.