தாய்மை எனப்படுவது யாதெனில்...

  கோமதி   | Last Modified : 22 Dec, 2018 04:54 pm

greatness-of-motherhood

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது அப்பெண்ணின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அத்தகைய காலத்தில் அவர்களது பழக்க வழக்கமும், ஆரோக்யமான ஆகாரமும்,நிம்மதியான மனநிலையும், ஆழ்ந்த உறக்கமும், அளவிடாத மகிழ்ச்சியும்தான் குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. அத்தகைய ஆரோக்யத்தை எப்படிப் பேணுவது... உங்களுக்காகச் சில துளிகள்...
ஆரோக்யமான ஆகாரம்:

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் உணவு வகையில் அக்கறை கொள்வதில்லை. இன்றும் கிராமப்புற பெண்கள் பழைய சோறு மட்டுமே சாப்பிடுகின்றனர். இது போதுமானதல்ல. பொதுவாக கர்ப்பிணிகள் உயர்ந்த விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்களைத்தான் சாப்பிட வேண்டுமென்பதில்லை. பச்சைக்காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், சோளம், கேழ் வரகு, கம்பு போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

பழங்களிலும் விலை குறைந்த பழங்களான வாழை, கொய்யா, மாம்பழம், நெல்லிக்காய் ஆகிய பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. ஒரு கர்ப்பிணிப் பெண் சாப்பிடும் உணவுப் பொருளில் புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து இவை அனைத்தும் இருக்க வேண்டும்.
தினசரி இரு தம்ளர் பால் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, மாமிசம் சாப்பிடலாம்.சோயா பீன்ஸ், பயிர் தானிய வகைகளைச் சாப்பிடுவதும் பலம் தரும். சிலருக்கு பேறுகாலத்தில் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தான் இரும்புச்சத்துள்ள உணவு பொருள்களைச் சாப்பிட வேண்டும். கருவானது தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான ஆகாரத்தைத் தாயிடமிருந்தே பெறுகிறது. தாய் நன்றாகச் சாப்பிட்டால்தான் சேயின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். வெல்லம், கருப்பட்டி, தானியம், கிழங்கு வகைகள்,கீரை வகைகள்,பயறு வகைகள் மிகுந்த சக்தியைத் தரும்.

அவசியம் தெரிந்துகொள்ள கூடியவை

எந்த ஒரு செயலுக்கும் ஆத்திரம், கோபம் கொண்டு காச் மூச் என்று கத்தாமல்  அமைதியைக் கடைபிடியுங்கள். விட்டுத் தரும் மனப்பான்மை உங்களையும் உங்கள் மழலையையும் ஆனந்தமாக வைத்திருக்கும்.

பகலில் அதிகத் தூக்கம் வேண்டாம். அதே நேரம் உறக்கம் வந்தால்  உறங்குங்கள். இரவு நேரங்களில் அதிகம் விழித்திருக்க வேண்டாம். அதேபோல் கர்ப்பிணிகள் தூங்கும் போது அவர்களை எழுப்புவதும் கூடாது. 

தூங்கும் போது படுக்கையில் புரண்டு படுப்பதோ, கவிழ்ந்து படுப்பதோ மல்லாந்து படுப்பதோ குழந்தைக்கு நல்லதல்ல. எப்போதும் இடதுகைப்பக்கம் படுப்பதே நல்லது.

தினமும் காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, உடலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு மனதுக்கு பிடித்த இறைவனை வழிபடுங்கள். மனம் தெளிவாக இருக்கும்.

இலேசான பருத்தி ஆடைகள் நல்லது. கூடுமானவரை வெளிர் நீல நிற ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். அடர்ந்த நிறம் குறிப்பாக கறுப்பு நிற  உடைகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

தினமும் சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.நேரம் தவறி உண்பது கூடாது. குறிப்பாக அகால வேளையிலோ உண்பது நல்லதல்ல. டீ, காபி, மது இவைகளைத் தவிர்த்துப் பசும்பால் குடிக்கலாம். குளிர்பானங்களைத் தவிர்த்துப் பழச்சாறுகள் அருந்துவதும் நல்லது. அதிக அளவு இனிப்புப் பொருள்களை எடுத்துக்கொள்வது குழந்தையின் ஆரோக்யத்துக்கு நல்லதல்ல.

கர்ப்பிணிகள் மனம் கலங்கினால் குழந்தையைப் பாதிக்கும் என்பதால் எப்போதும் மனத்தைத் தைரியமாக வைத்துக்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பாங்கையும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோதைரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தொற்றுநோய் உள்ளவர்களுடன் கண்டிப்பாகப் பழகுவது கூடாது. இது குழந்தையின் வளர்ச்சி யையும் ஆரோக்யத்தையும் நிச்சயம் பாதிக்கும். 

ஓய்வு நேரங்களில் மனதை அலை பாயவிடாமல் நீதிக் கதைகள், மெல்லிய இசைகள் என உங்களை அமைதியான மனநிலையில் வைத்திருங்கள். டிவியில் வன்முறைக் காட்சிகள் நிறைந்த தொடர்களையும், அலற விடும் பாட்டுக்களையும், கண்டிப்பாக ஒதுக்கி வையுங்கள். அதிக சத்தத்தையும் தவிர்த்திடுங்கள்.காலையும் மாலையும் வீட்டிலேயே கூட நடைப் பயிற்சி செய்வது நல்லது. 

உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவலையோ, பயமோ கொள்ளாமல்  உரிய நேரத்தில் மருத்து வரை அணுகி ஆலோசனைப் பெறுங்கள். தேவையெனில் சத்துமாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் இணைந்திருங்கள். மனதை எப்போதும் உற்சாகமாய், மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் மனநிலையும் சூழ்நிலைகளையும் பொறுத்தே உங்கள் குழந்தையின் மனநிலையும் இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே பிறக்கும் குழந்தையும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்யத்துடனும் நன்றாக வளரும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.