அகமும்.. ஆரோக்யமும் சீராக ....சீக்கிரம் சீரகத்தண்ணீருக்கு மாறுங்கள்

  கோமதி   | Last Modified : 03 Jan, 2019 07:55 pm

switch-to-cumin-water-to-get-healthier-life

காலையில் எழுந்ததும் ஒரு தம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிதமான சூட்டில் குடித்தால் போதும்.. காபியும் வேண்டாம்.. டீ யும் வேண்டாம்... இப்படித்தான் எனக்கு அறிமுகமாயிற்று சீரகம் கலந்த நீர். சத்து மிக்க மினரல் வாட்டரில் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தான் குடிக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் என்ன செய்ய நடந்தால் உடம்பு கூட கூட வருகிறது என்று விளையாட்டாக கிராமப்புறங்களில் சொல்வார்கள். குடிக்கும் தண்ணீரில்  என்ன ஆரோக்யம் என்று நினைக்கலாம். இயற்கையை ஒதுக்கி செயற்கையை விரும்பத் தொடங்கிய போதே ஆரோக்யத்தின் அடிப்படையையும் இழந்துவிட்டோம். உண்ணும் உணவில் செரிமானம் குறைய தொடங்கியதில் ஆரம்பிக்கின்றது ஆரோக்ய பிரச்னை என்பதை அறிவோம். கடுமையான உடல் உழைப்பும்.. சோம்பல் இல்லாத வாழ்க்கையும்.. மூலிகைகளை உணவாக்கிய நம் பாரம்பரிய முறையை மறக்க தொடங்கியதில் மனிதனின் ஆரோக்யத்துக்கான அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. 

சமையலறையில் ருசிக்கு மட்டுமே என்று அரைவேக்காடாய் கிடந்ததல்ல நம் முன்னோர்களின் பொருள்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித மூலிகையாய்.. பலவித சுவைகளில் தனித்து நம்மை செழிப்போடு வைத்திருந்தனர். மீண்டும் அத்தகைய வாழ்வுக்கு செல்ல தயாராகும் சூழ்நிலையில் மூலிகையில் ஒன்றான சீரகத்தை சேர்த்தால் அகமும்.. ஆரோக்யமும் சீராகும் என்பதை கண்கூடாக காணலாம்.
சீர்+ அகம்=சீரகம். அகத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களுக்கு அறிமுகமாகிய சீரகம் சீரான வாழ்க்கை வாழ உதவிபுரிகிறது. உடல் உள் உறுப்புகள் சீராக இயங்கினாலே நோய் வருவதற்கு சாத்தியமில்லை. அந்த உறுப்புகளைச் சத்தமின்றி சீராக இயக்க சீரகம் பயன்படுகிறது. மிளகுடன் இணைந்து காணப்படும் சீரகத்தை ரசத்திலும்...

தாளிப்பிலும் பயன்படுத்துவோம். ஆனால் தினமும் நாம் குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைக் கலந்து குடித்தாலே அளவில்லா பயன்களை பெறலாம். என்ன சத்து இல்லை இந்த சீரகத்தில் .... என்று கேட்க கூடிய அளவுக்கு சீரகம் சிறந்து இருக்கிறது. அஜீரணக்கோளாறு இருக்கிறதா சீரகத்தை தண்ணீரில் கலந்து குடியுங்கள். மாத்திரைகளின்றி மலச்சிக்கலை ஒழிக்க சீரகத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவி புரியும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க சீரகம் உதவுகிறது. சீரகத்தில் உள்ள  பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த பிரச்னையைச் சீராக வைத்திருக்கிறது. இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தை சீரகம் அளிக்கிறது. சுவாசக் குழாயில் உள்ள நோய்க்கிருமிகளை விரட்டியடிக்க மாத்திரையை விட சீரகமே சிறப்பாக பணிபுரிகிறது. பித்தம், வாயுக்கள் சம்பந்தமான நோய்கள் தங்களை நெருங்கவிடாமல் இருக்க சீரகத்தைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.ஆரோக்யத்தோடு அழகையும் பொலிவையும் சரும மினுமினுப்பையும் பெற்று என்றும் இளமையுடன் ஜொலிக்க கூட சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ உதவுகிறது. 

பாக்கெட்டை கொண்டு வந்து வேக வைத்தாலே உணவாகிவிடும்  இக்காலத்தில் தாளிப்பு ஒன்றே மறந்துபோகும் நிலையில் இருக்கிறோம்.  தாளிக்காத உணவே பிரதான உணவாக இருக்கும்போது தாளிக்கும் உணவை சமயங்களில் தேடுகிறோம் என்பதை வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தெளிவாக சொல்வார்கள். பல்வேறு நோய்களுக்கு பலவித மாத்திரைகள் என்று ஓடாமல் பல நோய்களை ஆரம்பத்திலேயே விரட்டியடிக்க சீரகம் ஒன்று போதும். காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தண்ணீர் குடிப்பதில் தொடங்கி... இரவு வரை தாகம் எடுக்கும் போதெல்லாம் சீரகத்தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்... வயது ஆனாலும் இளமையின் துள்ளலோடு வலம் வர சீரகம் போதும். சீக்கிரம் சீரகத்தண்ணீருக்கு மாறுங்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.