கோடைக்கால நோய்களும்... தீர்வுகளும்!

  Shalini   | Last Modified : 12 Apr, 2018 12:11 am

கோடைகாலம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியானதோ, அதே அளவுக்கு பல பிரச்னைகளையும் உள்ளடக்கியது. குளிர்காலத்திலிருந்து கோடையின் துவக்கமாக வானிலை மாறியிருப்பதால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் எழும். அதே சமயம், அதிக உஷ்ணத்தை உடல் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும். அதனால் கோடைகால பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை நியூட்ரிஷியன் - டயட்டீஷியன் சாதனா ராஜ்குமாரிடம் கேட்டோம்...

வெப்பநிலை மாற்றத்தால் நிறைய பேருக்கு சளி, இருமல், ஜலதோஷம், தும்மல், சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவைகள் வரக்கூடும். அதிகமாக பூ பூக்கும் தருணம் என்பதால் அதன் மகரந்தம் காற்றில் பரவும். இது நிறையப் பேருக்கு ஒத்துக் கொள்ளாமல் கண் தொற்று (மெட்ராஸ் ஐ), கண் சிவந்து போதல் ஆகியவை ஏற்படலாம். வெயிலில் அலைவதால் சன் டேன்-சன் பர்ன், போதிய தண்ணீர் குடிக்காததால் டீ-ஹைட்ரேஷன்-சிறுநீரகத் தொற்று, வெளியில் சாப்பிடுவதால் டயரியா ஆகியப் பிரச்னைகளும் ஏற்படக் கூடும்.

அதிகமாக வியர்க்கும் என்பதால் உடல் துர்நாற்றம் வீசும், அக்குள் மற்றும் உள்புற தொடையில் எரிச்சல் உண்டாகும். இந்த சீசனின் முக்கியப் பிரச்னை அம்மை. உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் இது பரவக் கூடும். மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஸோ, இதெல்லாம் சம்மரில் வரக்கூடிய நோய்த் தொற்றுகள். இதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சம்மர் என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விஷயம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பத்து கிளாஸ் குடிங்க, 3 லிட்டர் குடிங்க என சொல்வார்கள். அவ்வளவு எல்லாம் குழம்பத் தேவையில்லை. யாருக்கெல்லாம் சிறுநீர் 'டார்க்'காக இருக்கிறதோ, அவர்களின் உடலில் நீர்ச்சத்துப் போதவில்லை என்று அர்த்தம். அதனால் அவர்களுக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ, அப்போதெல்லாம் சற்றுக் கூடுதலாக குடிக்க வேண்டும். அவரவரின் உடலைப் பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடும். தொடர்ந்து சிறுநீர் டார்க்காக இருந்தால் கிட்னி பிரச்னை இருக்கக் கூடும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

முடிந்தளவு வெளியில் போகும் போது, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் தற்போது 'வாட்டர் கண்டாமினேஷன்' என்பது அதிகமாகிவிட்டது. அதே மாதிரி வெளியில் சாப்பிடுவதையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஹோட்டல்களில் அதிக உணவு சமைப்பார்கள், சமையலறை என்ராலே வியர்வை தான், அதிலும் இந்தக் காலநிலையில் சொல்ல வேண்டியதில்லை. அதனால் அவர்களின் பாதி வியர்வை நமது சாப்பாட்டில் தான் இருக்கும். வெளியில் தான் சாப்பிட வேண்டும் என்பவர்கள் சுகாதாரமான ஹோட்டல்களில் சாப்பிடலாம்.

ரோட்டோர உணவுப் பொருட்கள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடவே கூடாது. முக்கியமாக, பணம் வாங்கும் அதே கையில் பழங்களையும் நிறைய பேர் கட் பண்ணித் தருவார்கள். ஏனென்றால் காசு நிறைய இடங்களில் நிறைய பேரின் கைகளில் மாறி வருகிறது, அதனால் அதில் அவ்வளவு கிருமி இருக்கிறது. வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

உடல் சூட்டைத் தணிக்க, வெள்ளைப் பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், செளசெள என நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினம் ஒன்றாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நமக்குத் தேவையான நியூட்ரியன்ட்ஸையும் கொடுக்கிறது.

கீரைகளில் வெந்தயக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்பு கீரை, முளைக்கீரை ஆகியவைகள் மிகவும் குளிர்ச்சியானவை. அதனால் இந்த கிளைமேட்டில் அவசியம் சாப்பிட வேண்டும்.

இயற்கைத் தரும் ஆல்கலைன் பொருளான கரும்பு ஜூஸை இந்த சமயத்தில் பருகுவது மிகவும் நல்லது. இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கிர்ணி, லெமன் ஜூஸ் ஆகியவைகளும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மோரில் சீரகம், வெள்ளரிக்காய்,கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து தினமும் குடிக்கலாம். சளி பிடித்திருந்தால் மோருடன் மிளகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மோரில் பச்சை மிளகாய், என இப்படியும் குடிக்கலாம். ஏனென்றால் பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கிராமத்தில் இரவு மீதமான சாதத்தை மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலை, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள். இதில் விட்டமின் பி12, உடலுக்குத் தேவையான குளிர்ச்சி என எல்லாமே கிடைக்கும், அதனால் இதையும் ஃபாலோ பண்ணலாம்.

ஆஃபிஸில் காபி, டீ-க்கு பதிலாக ஜூஸ் அல்லது பழங்கள் சாப்பிடலாம். நான் -வெஜ் சாப்பிடுபவர்கள் நாட்டுக் கோழி, மீன் சாப்பிடலாம். அதுவும் குழம்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இவற்றுடன் இரவு உணவை லைட்டாக எடுத்துக் கொள்வது எப்போதுமே சிறந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close