பிரா அணிவது ஆரோக்கியமா? - ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

  Padmapriya   | Last Modified : 12 Jul, 2018 08:31 pm

busting-those-bra-myths

பெண்களின் ஆரோக்கியம் என்பது குடும்பத்தின் ஆணிவேர். குடும்பத் தலைவி உடல்நலக் குறைவு என்று படுப்பதே குறைவு. அப்படி அவர்கள் ஓய்வெடுத்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் நிலை அதோகதிதான். ஆனால், குடும்பத் தலைவியோ, தன்னுடைய உடல் நலத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது இல்லை. அப்படி ஒன்றுதான் அவர்கள் உள்ளாடை தொடர்பான விஷயம்.

உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். இதனால், பெண்களின் உள்ளாடையான பிரா குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் மாறுபட்ட தகவல்கள், வேறுபட்ட மருத்துவ ஆலோசனைகள் என முடிவே இல்லாமல் இருக்கும் விஷயமாகவே இருக்கும். நிச்சயம் குழப்பம் நிறைந்த ஆய்வுகள் பட்டியலில் பெண்களின் உள்ளாடை தொடர்பான ஆய்வையும் காணலாம். 

பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும்... பிரா அணியாமல் இருப்பதால் பல சிக்கல்கள்,  இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான ஆலோசனைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றது. ஆய்வு முடிவுகள் எதுவும் பெண்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் இல்லை. அவர்களை மேலும் குழப்பதில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றன.

இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன், ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். மருத்துவம், உளவியல், மார்க்கெட்டிங் என பல விதங்களில் அவர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதனால், ஓரளவுக்கு நம்பும்படியாக இருக்கிறது. இதை ஏற்பதா இல்லையா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

► அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.

► பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தரவுகளை பெற்றுள்ளார்.  அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார். 

► தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

► இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.

எனவே, பெண்கள் பிரா அணியவே கூடாதா என ரௌலியனிடம் கேட்ட போது, "பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை. மேல் உள்ளாடை அணிவதற்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதை அணிவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுவது எல்லாம் வியாபார யுக்தி மட்டுமே' என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறைகாட்டுவதைவிட அழகுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். இதை மூலதனமாக வைத்துத்தான் பல அழகுசாதன நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மார்பங்கள் இறுக்கமாக வைத்திருக்க, கவர்ச்சியாக இருக்க என்று ஸ்பெஷல் பிராக்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை எல்லாம் உண்மையில்லை என்று ரௌஸியன் கூறுகிறார். எனவே, இதுபோன்ற மூளைச் சலவையில் ஏமாந்து, உடல் நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார் அவர்.

வயது அதிகரித்தல், குழந்தைப் பேறு, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போன்ற காரணஙகளால் மார்பகங்களின் இறுக்கம் குறையும். இது இயற்கையானது. எனவே, இதில் கவனம் செலுத்துவதற்கு பதில் ஆரோக்கிய வாழ்வு, வீட்டிலேயே எளிய மார்பக புற்றுநோய் சுய பரிசோதனை, சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது, மருத்துவர் பரிந்துரைபடி குறிப்பிட்ட கால இடைவெளியில் மேமோகிராம் பரிசோதனை என்று வாழ்ந்துவந்தால், எந்த பிரச்னையும் இல்லை. எந்த ஒரு உள்ளாடையாலும் இயற்கையாகவே ஏற்படக் கூடிய மார்பக தசை தளர்வை தடுக்க முடியாது என்கிறார் அவர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.