ஜப்பானில் சாமியார் உள்பட 7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 05:52 pm
tokyo-sarin-attack-aum-shinrikyo-cult-leaders-executed

ஜப்பானில் சுரங்கப்பாதைக்குள் சரின் நச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற வழக்கில் சாமியார் உள்ளிட்ட 7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1995-ம் ஆண்டு சுரங்கப்பாதை ஒன்றில் சரின் நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. சரின் நச்சுவாயு இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்டது. பாஸ்பரஸ் வகை வாயுவான இது உடலில் உள்ள நரம்புக்குள் ஊடுருவி தாக்கி மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த வாயு தாக்குதலின்போது சுரங்கத்தினுள் இருந்த ஏராளமான மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், பலருக்கும் கண் பார்வை பறிபோனது, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகினர். மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இன்றுவரை அவதிபடுகின்றனர். 

இந்த சம்பவத்துக்கு,  அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (63) என்ற சாமியாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரோடு அவரது சிஷ்யர்கள் 6 பேருக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

பின்னர், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. விசாரணையின்போது, ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த டொமோமசா நககவா, கியோஹைட் ஹயகவா, யோஷிஹிரோ இனாவ், மசாமி சுசியா, செய்ச்சி என்டு, டொமோமிட்சு நீமி ஆகிய 6 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றனர். 

கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அதே தீர்ப்பை உறுதி செய்தது. அடுத்தடுத்து தொடரப்பட்ட மேல்முறையீடுகள் யாவும் பயனில்லாமல், கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில், ஷோகாவும் மற்றம் அவரது 6 சிஷ்யர்களும், டோக்கியோ சிறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர். ஜப்பானில் இந்தச் சம்பவம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகும். பெருமாபாலும் குற்றச்செயல்கள் நடக்காத அந்த நாட்டில், இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியதாக இருந்தது. 

தூக்கிலிடப்பட்ட சாமியார் ஷோகோ, இந்து - புத்த மத நம்பிக்கைகளை இணைத்த அம் ஷின்ரிக்யோ மத வழிபாட்டு முறையை தொடங்கினார். பின்னர் இவர் தன்னைத்தானே ஏசு கிறிஸ்து என்றும் கூறிக்கொண்டார். அதோடு தன்னை அடுத்த புத்தர் என்றும் அறிவித்துக்கொண்டார்.

ஜப்பானில் ஷோகோவின் குழு 1989-ம் ஆண்டு மத அமைப்பாக அங்கீகாரம் பெற்றது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த அமைப்பை மத ரீதியிலான பயங்கரவாத அமைப்பாகவும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close