கனடாவில் 150 தமிழ் அகதிகளை மீட்ட மீனவர் மரணம்

  Shanthini   | Last Modified : 20 Jan, 2018 01:59 am


கனடாவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் உயிருக்காகப் போராடிய 150 ஈழத்தமிழ் அகதிகளை மீட்ட மீனவரான கெஸ் டல்டன் உடல்நலக் குறைவுக் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 87.

1986ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கெஸ் டல்டன், அந்த நடுக்கடலில் 100க்கும் மேற்பட்டோரைக் கொண்ட இரண்டு சிறிய படகுகள தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார். தனது 30 வருட மீன்பிடி வாழ்க்கையில் அப்படி ஒரு சூழலை எதிர்க்கொள்ளாத கெஸ் டல்டனும் அவர் சகோதரரும் தங்கள் படகில் பாதிக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டுள்ளனர். 

கனடா கடற்படையினரின் உதவியுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற அனைவரையும் மீட்டுள்ளனர். அவர் மேற்கொண்ட மனிதாபிமான அடிப்படையிலான மீட்புப்பணி அப்போது சர்வதேச செய்திகளில் பரவலாக வெளியாகின.

“நாங்கள் அவர்களை மீட்ட பகுதி அட்லாண்டிக் கடலின் கல்லறை என உலகெங்கும் அறியப்படும் பகுதியாகும். அங்கு பலர், தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்” எனக் கூறியிருக்கிறார் கெஸ் டல்டன்.

அவரால் மீட்கப்பட்ட தமிழ் அகதிகள் பலர் அவரை மறவாது சந்தித்து நட்பு பாராட்டிவந்தனர். மீட்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டின் நினைவின் பொழுது கெஸ் டல்டனை தமிழ் அகதிகள் கெளரவித்தனர் . 30 ஆண்டுகளுக்குப் பின் கெஸ் டல்டனை தமிழ் அகதிகள் அவரது வீட்டில் சந்தித்த உணர்வுப்பூர்வமான நிகழ்வும் நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 16ம் தேதி இறந்த கெஸ் டல்டனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அட்மிரல்ஸ் கடற்கரையில் நாளை(ஜனவரி 20) நடைபெறவுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.