உருகுவே நாட்டைத் தொடர்ந்து, கனடாவில் கஞ்சா உபயோகிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களில் ஒன்றான கஞ்சாவை பயன்படுத்த பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. உலக நாடுகளில், முதலாவதாக கஞ்சாவை உபயோகிக்க சட்டபூர்வமாக அனுமதியளித்த நாடு உருகுவே.
இதையடுத்து கடந்த 2001ம் ஆண்டு முதல் கனடாவில் மருத்துவத்திற்காக மட்டும் கஞ்சா உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முழுவதுமாக கஞ்சா உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என கனடா நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சா உபயோகிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதும், ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
இதனால் கனடாவில் சட்டபூர்வமாக கஞ்சாவை உபயோகிக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இதன் மூலமாக சட்டவிரோத கஞ்சா கடத்தல் ஒழிக்கப்படும்" என்று தெரிவித்தார். கனடாவில் ஒரு ஆண்டில் ரூ.25,000 கோடி முதல் ரூ.35,000 கோடி வரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.