9/11 பாணியில் கனடா மீது தாக்குதல்: 'சவுதி' தரப்பு மிரட்டல்

  Padmapriya   | Last Modified : 08 Aug, 2018 04:32 am

saudi-arabia-appears-to-threaten-canada-with-9-11-style-attack

கனடாவின் வானுயர கட்டடம் மீது சவுதியின் விமானம் மோத செல்வது போலான படத்தை சவுதி அரேபிய குழு ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய குழு ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கனடாவின் மிகப் பெரிய கட்டடம் ஒன்றின் மீது சவுதியின் விமானம் மோத செல்வது போலான படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டது. அதோடு, தனக்கு தொடர்பில்லாத விவகாரத்தில் தலையிடுவதாக இருந்தால், அசவுகரியமான விஷயங்களை சந்திக்க நேரிடும் என்றுக் கூறும் அரேபிய வாசகமும் அந்தப் படத்தில் எழுதப்பட்டிருந்தது. 

அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் போல சித்தரிக்கப்பட்டு கனடாவை மிரட்டுவது போல அந்தப் படம் சவுதியில் இருந்து இயங்கும் இளைஞர் குழுவால் வெளியிடப்பட்டது.  இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக தொடர்புடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்தப் படம் நீக்கப்பட்டது. அத்துடன் அந்தக் குழுவும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதற்கிடையே சவுதியின் உள் விவகாரங்களில் கனடா தலையிடுவதாக குற்றம்சாட்டி, அதன் தூதரை நாட்டை விட்டு வெளியேற சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. 

சவுதியில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் புகழ் பெற்ற மனித உரிமை போராளி சமர் பதாவி உள்ளிட்டவர்களும் அடக்கம். இந்த நடவடிக்கை கவலை அளிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், ''அமைதியான முறையில் போராடிய மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் சவுதி அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு சவுதி அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில் ''உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கனடா அரசின் வார்த்தை மிகவும் துரதிருஷ்டவசமானது. இருநாட்டு உறவில் இந்த வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதைத்தொடர்ந்து கனடா தூதர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வெளியேற 24 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கனடாவில் உள்ள சவுதியின் தூதரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார். இரு நாடுகளுக்கிடையிலான புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளன'' என்று அதிரடியாக அறிவித்தது. 

இதன் மூலம் சவுதியின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் மேற்கு நாடுகளுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.