தலாய் லாமாவுக்கு புற்றுநோயா? - அமெரிக்க ஊடகங்கள் செய்தி!

  Padmapriya   | Last Modified : 12 Jun, 2018 04:10 pm

dalai-lama-terminally-ill-with-prostate-cancer-claims-news-report

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்ததைத் தொடர்ந்து, திபெத்திய புத்த மதத் தலைவா தலாய் லாமா இந்தியா வந்தார்.  ஹிமாச்சல பிரதேச மாநிலம தர்மசாலாவில் தங்கியிருந்து ஆன்மிக பணியை மேற்கொண்டு வருகிறார். தற்போது, 81 வயதாகும் தலாய் லாமா இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், ஆனால் சீனாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. 

மேலும் அந்த செய்தியில், தற்போது அவரது உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவரது பயணம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மத்திய திபெத்திய நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து மத்திய திபெத்திய நிர்வாகத்தின் சிஏடி (CAT) செய்தித் தொடர்பாளர் சோனம் டக்ஸ்போ , சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தலாய் லாமாவின் உடல்நிலை இப்போது சிறிது கவலையாக உள்ளது. இந்த ஆண்டு அவரது பொது ஈடுபாடு மற்றும் பயணம் குறைந்துள்ளது. மார்ச் மாதம், சோர்வு மற்றும் வயது முதிர்வு காரணமாக அவரது பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு வயது முதிர்வு மட்டுமே காரணம். தவிர கவலையளிக்கும் நோய் பாதிப்பு எதுவும் தலாய் லாமாவுக்கு இல்லை"  என்றார். 

திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் 1935ல் பிறந்த இவரது இயற்பெயர் லாமொ தொண்டுப். 14-வது தலாய் லாமாவாக 1950-ல் முறைப்படி பொறுப்பேற்றார். திபெத்திய புத்த மதத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிப்பிடும் பெயர்தான் 'தலாய் லாமா'. தங்களது மரபு வழித் தலைவராக திபெத் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா இதை ஏற்கவில்லை. சுதந்திர திபெத் என்றநிலையைத் தாண்டி, திபெத்துக்கு சுயாட்சி ஆவது வழங்க வேண்டும் என்று போராடி வருகிறார். தன்னுடைய கோரிக்கையை என்றாவது ஒருநாள் சீனா செவிமடுக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறார். உலக நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 1989-ல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close