வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

  Anish Anto   | Last Modified : 25 Dec, 2017 11:22 am

அயர்லாந்து நாட்டை சேர்ந்த நண்பர்களான இரண்டு ஆண்கள், சொத்து வரி கட்டுவதில் இருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது.

85 வயதான மேட் மார்பி மற்றும் 58 வயதான மைக்கேல் ஓ சல்லிவன் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மைக்கேல், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். முதுமை மற்றும் தமனி அழற்சி நோயால் தனியாக அவதிப்பட்டு வந்த மார்பியை கவனித்து கொள்ளும் பணிக்கு சல்லிவன் சேர்ந்தார். நாளைடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

வீடு இன்றி தற்காலிக தங்கும் இடத்தில் வசித்து வந்த மைக்கேல், அவ்வப்போது மார்பியின் இல்லத்திலும் வந்து வசித்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் மார்பி தன்னுடனே வந்து வசிக்குமாறு மைக்கேலிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு உடன்படாத மைக்கேல், அவ்வப்போது அங்கு வந்து தங்கி உள்ளார். இந்த நிலையில், மைக்கேலுக்கு கொடுக்க போதிய பணம் மாரிபியிடம் இல்லை. இதனை அடுத்து தனது வீட்டை மைக்கேலின் பெயருக்கு எழுதி வைத்து அதன் மூலம் அவரது பணிக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தலாம் என மார்பி முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார்.

ஆனால் வீட்டை அவர் பெயருக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். அதற்கும் அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என இருவரும் யோசித்து வந்த நிலையில் சல்லிவனின் தோழி ஒருவர், மைக்கேல் மற்றும் மார்பி இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என விளையாட்டாக கேட்டுள்ளார். ஆனால் அப்போது இருவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

சிறிது நாட்களுக்கு பிறகு மார்பி இதே கேள்வியை மைக்கேலிடம் கேட்க அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சல்லிவனுக்கு இது இரண்டாவது திருமணமாகும், மார்பிக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து நாட்டில் ஓர் பால் ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ள 2015-ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எதிர் பாலீர்ப்பு கொண்ட ஆண்கள்  (heterosexual men) இருவர் வரி கட்டுவதற்கு முடியாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அயர்லாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.