காங்கிரஸுடன் தொடர்பு: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழியர் வாக்குமூலம்

  SRK   | Last Modified : 28 Mar, 2018 02:19 pm


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற இணைய ஆய்வு நிறுவனம், தேர்தலின் போது மக்களின் வாக்குகளை மாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அந்த நிறுவனம் கூட்டணி வைத்திருந்ததாக அதன் ஊழியர் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் இயங்கி வந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பணியாற்றியது. ஒரு ஆப் மூலம் பொதுமக்களின் அபிமானங்களை அறிந்து கொள்ளும் போர்வையில், அவர்களது பேஸ்புக் கணக்கில் இருந்து தனிப்பட்ட விவரங்களை சேகரித்து அதன் மூலம், இணைய விளம்பரங்கள் உருவாக்கி டிஜிட்டல் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளது. தனது ஆப் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், அவர்களது நண்பர்கள் சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளின் விவரங்களையும் சட்டவிரோதமாக சேகரித்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கிறிஸ்டோபர் வைலி தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் வெற்றிக்கு இந்த நிறுவனம் மிகப்பெரிய பங்காற்றியதாக கருதப்படும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பணியாற்றியதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. பேஸ்புக் மீது பிரிட்டன் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி அந்நிறுவனத்துடன் கூட்டு வைத்திருந்ததாக பாரதிய ஜனதாவும், பாரதிய ஜனதா கூட்டு வைத்திருந்ததாக காங்கிரஸ் கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தன. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளை நிறுவனம் ஒவ்லெனோ, காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சிகளை தனது வாடிக்கையாளர்களாக காட்டிக் கொண்டது, மேலும் பல கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், கிறிஸ்டோபர் வைலி, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். அப்போது அவர், கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா, எந்த நாட்டின் சட்டத்தையும் பின்பற்றுவதில்லை என்றும்,  ஜெயிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பணியாற்றியதாகவும் தெரிவித்தார். மேலும், பல மாநில கட்சிகளும் தங்களது சேவைகளை உபயோகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவுடனான காங்கிரஸ் கட்சியின் தொடர்புகள் பற்றி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close