கஷோகி படுகொலை: சவுதிக்கான ஆயுத விற்பனையை சுவிட்சர்லாந்தும் நிறுத்தியது  

  Padmapriya   | Last Modified : 01 Nov, 2018 05:35 pm

switzerland-suspends-arms-shipment-to-saudi-over-khashoggi-case

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரண விவகாரத்தை முன்வைத்து சவுதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து சுவிட்சர்லாந்து பொருளாதாரத்துறைக்கான செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.  ஜமால் கஷோகி கொலையில் அடுத்தடுத்து தெரியவரும் முன்னேற்றங்களை அடுத்து இந்த முடிவு திரும்ப பெறப்படலாம்” என்றார்.

முன்னதாக சவுதிக்கு பெருவாரியான ஆயுத விற்பனையை செய்யும் நாடான ஜெர்மனி சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையும் சவுதிக்கு மிகப் பெரிய அடியாக அமையும். ஜமால் கஷோகி மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி உறுதியாக தெரிவித்திருந்தது. 

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்  சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.