ஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 05:27 am
strasbourg-shooting-shooter-killed-after-manhunt

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை, 2 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, போலீசார் கண்டுபிடித்தனர். குற்றவாளியை கைது செய்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன் மூன்று பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து குற்றவாளியை அப்பகுதி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகப்படும்படியான நபரை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த, போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட குற்றவாளி, 29 வயதான செரிப் செக்கட் என தெரியவந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார் செக்கட். கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் அப்பகுதி மக்களை அவர் தாக்க, 3 பேர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளி செக்கட் ஏற்கனவே பிரான்ஸ் போலீசாரின் கண்காணிப்பு பட்டியலில் இருந்ததாக தெரிகிறது. அவர் தீவிரவாதியாக மாற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது நடந்துள்ள தாக்குதல், தீவிரவாத தாக்குதலாகவே அந்நாட்டு போலீசாரால் பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த தாக்குதல் நடந்துள்ளதால், பிரான்ஸின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,800 பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close