அழிவை நெருங்குகிறது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு!

  SRK   | Last Modified : 27 Dec, 2017 05:38 pm


ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான ஐ.எஸ் தீவிரவாதிகள் மட்டுமே மிச்சமிருப்பதாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழலை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அங்கு பல பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை ஆட்சி புரிந்து வந்தது. மேலும்,  தங்களது கொள்கைகளை மற்ற நாடுகளுக்கும் பரப்பும் விதமாக, தீவிரவாதிகளை ஏவி பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு தாக்குதலைகளை ஐ.எஸ் நடத்தியது. 

முன்னணி நாடுகளில் இருந்து தங்கள் இயக்கத்திற்கு இளைஞர்களை ஆள் சேர்த்து வந்த ஐ.எஸ் கண்ணில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கேரளாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் சேர நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். பல முக்கிய நகரங்களில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க உதவும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிக்கவும், ஈராக் மற்றும் சிரியாவை மீட்கவும், பல்வேறு நாடுகள் இணைந்து கூட்டணி அமைத்து, போரிட்டு வருகின்றன. அமெரிக்கா தலைமையில் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, ஐ.எஸ்-ஸை ஒழித்துகட்ட வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ் பிடியில் இருந்த முக்கிய நகரங்களை ஈராக் அரசு கைப்பற்றிவிட்ட நிலையில், தற்போது ஆயிரத்திற்கும் குறைவான தீவிரவாதிகள் மட்டுமே அங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"கூட்டுப்படைகளின் கடும் முயற்சியாலும், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ளவர்களின் உதவியாலும், தற்போது 1000க்கும் குறைவான ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் மிச்சமிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது" என கூட்டுப்படை தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில், 3000 தீவிரவாதிகள் எஞ்சியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது ஆயிரமாக குறைந்துள்ளது. பல தீவிரவாதிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பை வீழ்த்திவிட்டதாக கடந்த 9ம் தேதி ஈராக் அரசு அறிவித்த நிலையில், தற்போது அந்த அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close