மும்பை தாக்குதல் குற்றவாளியுடன் பாலஸ்தீன தூதர் சந்திப்பு... இந்தியா எதிர்ப்பு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 30 Dec, 2017 10:10 pm

மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹஃபீஸ் சையத் உடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் ஒரே மேடையில் கலந்துகொண்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து அவரை பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மும்பையில் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹஃபீஸ் சையத். இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருகிறான். சமீபத்தில் ஓர் அரசியல் கட்சியைக் கூட ஆரம்பித்துள்ளான். இந்தநிலையில், பாகிஸ்தானில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் இந்த பயங்கரவாதி ஹஃபீஸ் சையத் உடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர்  வாலித் அபு அலியும் கலந்துகொண்டார். 

சில தினங்களுக்கு முன்பு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக டிரம்ப் அதிரடியாக அங்கீகரித்தார். ஆனால், இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்று ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இஸ்ரேல், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஆதரவு அளித்தது இந்தியா. இதனால், தீர்மானம் வெற்றிபெற்று அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக இஸ்ரேல் உடனான உறவு பாதிக்கப்பட்டது. 


பாலஸ்தீனத்தின் தூதர் ஒருவர் இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை நிகழ்த்திவரும் பயங்கரவாதியுடன் எப்படி ஒரே மேடை ஏறலாம் என்று இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. பாலஸ்தீன தூதரின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. 

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் நிகழ்வு தொடர்பாக பாலஸ்தீனம் தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்ற தூதர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலஸ்தீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டது.

பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதரின் செயல்பாடு பாலஸ்தீன அரசுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எதிர்ப்பை கருத்தில்கொண்டு, தூதரை திரும்பப் பெற பாலஸ்தீனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை, இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அத்நான் அபு அல் ஹைஜா உறுதி செய்துள்ளார்.

அலிக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதாகவும், அதற்குள்ளாக அவர் தூதரகத்தை காலி செய்து பாலஸ்தீனம் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close