சமீப காலமாக சவுதி அரசு அந்நாட்டில் உள்ள ஊழல்வாதிகள், அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்து வருகிறது. ராஜ வாரிசான இளவரசர் சல்மான் உத்தரவில், அந்நாட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.
அரசை ஏமாற்றி பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வந்த தொழிலதிபர்கள் மற்றும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை குறிவைத்து கடந்த வருடம் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலரை கைது செய்து, அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (100 பில்லியன் டாலர்) அளவுக்கு மீட்கப்பட உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர்களுடன் அரசு ஒரு சமரசத்துக்கு வந்து, இந்த தொகையை பெறவுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நூறுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
"இதுவரை கைதானவர்களிடம் இருந்து சுமார் 400 பில்லியன் ரியால் (100 பில்லியன் டாலர்) அளவுக்கு மீட்க ஒப்பந்தத்துக்கு வந்துள்ளோம். ரொக்கமாகவும், சொத்துக்கள் மூலமாகவும், இந்த தொகை மீட்டெடுக்கப்படும்" என சவுதி அட்டர்னி ஜெனரல் ஷேக் சவுத் அல் மொஜெப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.