ஈராக் நாட்டை சேர்ந்த பிணையக் கைதிகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் கொன்றதற்கு பதிலடியாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 12 பேருக்கு ஈராக் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஈராக்கின் முக்கிய பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீட்டது அந்நாட்டு ராணுவம். இதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஈராக் மக்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிராதிகளிடம் பிணையக் கைதிகளாக இருந்த 8 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள், பாக்தாத் நகருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 12 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டின் அதிபர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே அனைத்து மேல்முறையீடுகளும் செய்து தண்டனை உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமரின் உத்தரவின் பேரில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 தீவிரவாதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது" என கூறப்பட்டது. எப்படி அவர்கள் கொல்லப்பட்டார்கள் என அதில் கூறப்படவில்லை. பொதுவாகவே, ஈராக்கில் மரண தண்டனையை, தூக்கிட்டு அந்நாட்டு அரசு நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.