சிரியாவில் கூட்டா மாகாணத்தில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்

  PADMA PRIYA   | Last Modified : 23 Mar, 2018 06:50 pm

சிரியாவின் கிழக்குக் கூட்டாப் பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதியில் போர் நிறுத்தத்தையும் மீறி சிரியா மற்றும் சிரியா ஆதரவு ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது, கிளர்ச்சியாளர்கள் தரப்பு அம்மாகாணத்தில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளது.

சிரியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்தின் அரசுப் படைக்கும் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவும் ஈரானும் சிரிய ஜனாதிபதி ஆசாத்துக்கு ஆதரவு அளித்து தாக்குதல் நடத்திவருகிறது. கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின்றன. இதனால் அங்கு 6 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக வேறு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

முன்னேறும் ஆசாத் தரப்பு: ரஷ்ய விமானப்படை ஆசாத்துக்கு ஆதரவாக சிரியாவில் முகாமிட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. எனவே சிரியாவில் சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் ஆசாத் படைகள் கடந்த சில வாரங்களாக ரசாயன ஆயுத தாக்குதல் உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன் விளைவாக கூட்டா பகுதியில் தொடர்ந்து அரசுப் படைகள் தாக்குதலில் முன்னேறி வருகிறது. அதிகப்படியான பொது மக்களும் உயிரிழந்து வருகின்றனர். மேலும் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சிரிய போராளிகள் குழுக்களில் ஒன்று, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளியேறும் கிளர்ச்சியாளர்கள்: இது குறித்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்ரர் அல் ஷாம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முன்சர் பெர்ஸ் கூறுகையில், "சிரிய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாங்கள் எங்கள் ஆயுதங்களுடன் வெளியேறுகிறோம். மேலும் பொதுமக்கள் அவர்கள் வேண்டும் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இனியாவது பயங்கர தாக்குதல் நடத்துவதை சிரிய ராணுவம் கைவிடுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close