'கஷோகியின் உடல் துண்டாக்கப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது'

  Padmapriya   | Last Modified : 03 Nov, 2018 08:50 am

khashoggi-s-body-cut-into-pieces-and-dissolved

சவுதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புலில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் கஷோகியை கொன்றவர்கள், அது குறித்த எந்த அடையாளத்தையும் விடக்கூடாது என்ற எண்ணியிருக்கும் பட்சத்தில் "அதுமட்டுமே சாத்தியமான வாய்ப்பாக இருக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்தார்.

ஹூரியத் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறிய மூத்த துருக்கி அதிகாரியும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகருமான யாசின் அக்டாய் ,  ''ஜமால் கஷோகியின் உடலை அவர்கள் வெட்டியதற்கு காரணம் , உடல் பாகங்களை அமிலத்தில் கரைப்பதற்காக இருக்கலாம். பின்னர் அதனை சாம்பலாக்கவும் செய்துள்ளார்கள் என்று தற்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம்'' என்று கூறினார்.

ஆனால், கஷோகியின் சடலம், அமிலத்தில் கரைக்கப்பட்டதாக நிரூபிக்கும் எந்தவித தடயவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

கஷோகியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அவர் அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்று துருக்கி, அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தக் கொலையில் அரச குடும்பத்திற்கு பங்கில்லை என்று மறுத்துள்ள சவுதி, இது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறி வருகிறது. 

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலி ஜெங்கிஸை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.

இதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் அவரது உடல் பதுக்கப்பட்ட இடம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் சவுதியின் முரணான கருத்துகளை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.