சவுதி அரேபியா நாட்டை விட்டு சமீபத்தில் தப்பி ஓடி வந்த இளம்பெண் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், விருப்பமில்லாமல் அவரை சவுதிக்கு திருப்பி அனுப்பமாட்டோம், என தாய்லாந்து அரசு உறுதி அளித்துள்ளது.
ரஹப் முஹம்மது முல்தக் அல்-கனன் என்ற 18 வயது இளம்பெண், சவுதி அரேபியாவை சேர்ந்தவராவார். தனது குடும்பத்துடன் குவைத்துக்கு சுற்றுலா வந்திருந்த அல்-கனன், அங்கிருந்து தப்பி தாய்லாந்து வந்தார். தாய்லாந்தில் சில அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை கைப்பற்றி, மீண்டும் அவரை சவுதியில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்ப உள்ளதாக கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, தனது ஓட்டல் அறையில் இருந்து வெளியேற மறுத்த அல்-கனன், சமூகவலைத் தளங்களில் உதவி கேட்டுள்ளார்.
தான் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டதாகவும், திருப்பி தன் குடும்பத்தாரிடம் அனுப்பினால், அவர்கள் தன்னை சித்திரவதை செய்வார்கள் என்று கூறிய அவர், தனக்கு ஏதாவது ஒரு நாடு தஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு கூடியது. இதன் பின்னர் ஐநா அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். தற்போது அவருடைய பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்து, அவரது விருப்பமில்லாமல் சவுதிக்கு திருப்பி அனுப்பப் போவதில்லை, என தாய்லாந்து குடியுரிமை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அவருக்கு தற்காலிக குடியுரிமை வழங்க உள்ளதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இதே போல் இரு ஆண்டுகளுக்கு முன்பு சவுதியை விட்டு தப்பி வந்த பெண்ணை, கடும் எதிர்ப்புக்கு இடையே, பிலிப்பைன்ஸ் நாடு மீண்டும் சவுதியிடமே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
newstm.in