சிரியாவில் நடுநிலையான விசாரணை தேவை: உச்சகட்ட சூழலில் இந்தியா கருத்து

  Padmapriya   | Last Modified : 15 Apr, 2018 04:05 pm

சிரியாவின் நிலவரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்து நடுநிலையான ஆழமான விசாரணை தேவை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சிரியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியற்ற சூழலும் அவ்வப்போது போரும் நடந்துவரும் நிலையில், இது குறித்து இந்தியா முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து நாங்கள் கவனித்தே வருகிறோம். ரசாயன தாக்குதல் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நடுநிலையானதும் ஆழமானதுமான விசாரணை தேவை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அது வருந்தத்தக்கது. ஐ.நா. அறிவுறுத்தல்படி சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, எந்த ஒரு காலதாமதமும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். சிரிய மக்களின் நீண்ட கால துயரம் தீரும் என்று நம்புகிறோம். எனினும் தற்போது அங்கு நடக்கும் ராணுவத் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவாக செயல்படாது" என்று தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. அவசர ஆலோசனை சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை துவக்கியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அவசரமாக கூடுகிறது. அங்கு தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டாவில் சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதற்கு பதிலடியாக சனிக்கிழமை சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குல் நடத்தின. இந்தத் தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.

உளவு சொன்ன ரஷ்யா சிரியா மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் எச்சரித்தார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷ்யா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார். சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சவால் விட்டார். அத்துடன் நினைத்த இலக்கை எட்டியதாகவும் தெரிவித்தார்.

டவுமா நகர் முழுவதுமாக மீட்பு கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருந்த டவுமா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாகவும், அங்கு பதுங்கி இருந்த அரசு எதிர்ப்பாளர்கள் அனைவரும், விரட்டியடிக்கப்பட்டதாகவும் சிரியா அரசு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிரியாவின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசிய சிரியா ராணுவ செய்தி தொடர்பாளர், டமாஸ்கஸ் நகரின் புறநகரான கிழக்கு கவுட்டாவுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பயங்கரவாதத்தில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.