முஷாரஃப் தான் என் தாயை கொன்றார் - பெனாசிர் மகன் குற்றச்சாட்டு

  Anish Anto   | Last Modified : 28 Dec, 2017 08:03 am

தனது தாயின் மரணத்திற்கு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தான் காரணம் என பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ குற்றம் சுமத்தி உள்ளார்.

இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவருமான பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரது மரணம் தொடர்பாக பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.

பெனாசிரின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் முஷாரஃப் மற்றும் 5 தீவிரவாதிகளை விடுதலை செய்து கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி உத்தரவிட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ததாக தெரிவித்திருந்தது. மேலும், பெனாசிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக 2 போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

பெனாசிரின் 10-வது ஆண்டு நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பெனாசிரின் மகன் பிலாவல் பூட்டோ, "எனது தாயின் மரணத்திற்கு முன்னாள் தலைமை ராணுவ தளபதியும், அதிபருமான முஷாரஃப் தான் காரணம் . அவர் திட்டமிட்டே பெனாசிருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்தார். பெனாசிர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், தன்னுடனான உறவை பொறுத்தே பெனாசிரின் பாதுகாப்பு நிர்ணயிக்கப்படும் என முஷாரஃப் பெனாசிருக்கு மிரட்டல் விடுத்தார்.

தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்து விட்டது. அப்பாவி போலீஸ் அதிகாரிகளை சிறையில் அடைந்துள்ளது. ஐநா-வின் அறிக்கை, அரசு விசாரணை அறிக்கை, தொலைபேசி அழைப்பு பதிவுகள், மரபணு சான்று என எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதற்காகவும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பேசியதற்காகவும், மக்களை நேசித்தற்காகவும் பெனாசிர் கொல்லப்பட்டார். தற்போதைய ஆட்சியில் ஜனநாயகம் வலுவிழந்துவிட்டது. சிறிய மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசு ஒரு கொலைகார அரசு" என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.