ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர்! ஆப்கான் தூதர் குற்றச்சாட்டு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 02 Feb, 2018 02:51 pm

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆம்புலன்ஸ்சில் குண்டு வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இது ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய போர் என்று இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் டாக்டர் சாய்தா முகம்மது அப்தாலி இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இனப்படுகொலை. இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் உளவுப் பிரிவு தலைவர் இந்த ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது பாகிஸ்தானின் வழிகாட்டுதலில் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. இதேபோல், இன்டர்கான்டினன்ட் ஹோட்டல், ஆப்கானிஸ்தான் ராணுவ அகாடமி அருகே நடந்த தாக்குதலிலும் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது. 


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயலை மேற்கொள்பவர்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இதைப் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுபோன்ற பயிற்சி மற்றும் உதவிகள் அளிப்பது நிறுத்தப்பட்டதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

ஆப்கானிஸ்தான் ராணுவ அகாடமி அருகே நடந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடமிருந்து இரவு நேரத்தில் தெளிவாகப் பார்க்கக் கூடிய கண்ணாடியைக் கைப்பற்றியிருக்கிறோம். இது பொது மக்களுக்கு விற்கப்படுவது இல்லை. இது பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து பாகிஸ்தானால் வாங்கப்பட்ட கண்ணாடி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதைக் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கும் அளித்துள்ளது. இது பற்றி டெல்லிக்கும், அமெரிக்காவுக்கும் தகவல் அனுப்பியுள்ளோம்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close