ஆட்டம் போட வராததால் பாகிஸ்தான் நடிகை சுட்டுக் கொலை

  SRK   | Last Modified : 05 Feb, 2018 02:37 pm


பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா பகுதியை சேர்ந்த ஒரு பஷ்தோ மொழி நடிகை, சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சும்புல் என்ற பெண், பஷ்தோ மொழியில் மேடை நாடக கலைஞராக பணியாற்றி வந்தவர். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆட, சும்புல்லை 3 பேர் அழைத்துள்ளனர். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால், திடீரென வீட்டுக்குள் புகுந்து அவரை மூவரும் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. 

படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். சும்புல்லை சுட்ட மூவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், மற்றொருவர், சில வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பஷ்தோ மொழி பாடகியின் கணவர் ஜஹாங்கீர் என்றும் தெரிய வந்துள்ளது. 

2013ல் கஜாலா ஜாவேத் என்ற பஷ்தோ பாடகியும் அவரது தந்தையும் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஜஹாங்கீர் கைது செய்யப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீட்டில், இறந்தவர்களின் குடும்பத்தாருடன் சமரசத்துக்கு வந்ததால், அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது மற்றொரு பெண்ணின் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close