பாகிஸ்தான் தேர்தலில் 200 வேட்பாளர்களை நிறுத்தும் ஹபீஸ் சயீத் 

  Padmapriya   | Last Modified : 09 Jun, 2018 10:47 pm
mumbai-attacks-mastermind-hafiz-saeed-s-outfit-to-contest-pakistan-elections

வரவிருக்கும் பாகிஸ்தான்  நாடாளுமன்ற தேர்தலில், மும்பை தாக்குதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், 200 வேட்பாளர்களை  நிறுத்துகிறார். 

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழளில் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன. 

இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் தேர்தளில் நேரடியாக போட்டியிடவில்லை.  அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது. 

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, தீவிர பிரசாரத்தை துவங்குவோம் என்று ஹபீஸ் சயீத் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். 

தீவிரவாதி ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்துள்ளது. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதித்தது. இதனால், ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

பின்னர் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டார். 

லஷ்கர், ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதனைத் தொடர்ந்து மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினார். சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுவதையும் புதிதாக அரசியல் கட்சி அலுவலகம் திறந்திருப்பதையும் மேற்கத்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close