வட கொரியா - அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் புத்தாக்க முயற்சி?

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 05:14 pm
shehbaz-seeks-comprehensive-pakistan-india-talks-after-singapore-summit

சிங்கப்பூர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும் வடகொரியா சம்மதம் தெரிவித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. 

உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு போல, இந்தியாவும் தங்களுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ஷாபாஸ் ஷெரீப் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிந்துள்ள ட்வீட்டில், "கொரியப் போருக்கு பின்னர், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பகைமை கொண்டன.  அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக ஒருவருக்கு ஒருவர் மிரட்டல் விடுத்தனர்.

அணு ஆயுத முனையில் இருந்து அவர்கள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப முடிந்திருக்கிறது என்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதற்கு காரணமே இல்லை. இந்திய ஆக்கிரமிப்புகளை எதிர்க்கிற மக்களைக் கொண்டு உள்ள காஷ்மீர் விவகாரத்தில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

நமது பிராந்தியத்தில் விரிவான சமரச பேச்சு நடத்துவதற்கு இதுவே தக்க நேரம். ஐ.நா. தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். எங்கள் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்"  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close