பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருந்த வேட்பாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகிஸ்தானில் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தீவிரமாக அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் சூழலை அச்சுறுத்தும் விதமாக அங்கு பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள 2 தொகுதிகளில் மிர்சா முகமது அகமது முகல் என்பவர் சுயேட்சை வேட்பாளராக நிற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகமது தனது மகன்களிடம் ஏற்பட்ட தகராறினால் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான தேர்தலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. அவரது மரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பாகிஸ்தான் தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரப்வா நகரம் அமைதித்தீவாக காட்சி அளிக்கிறது. அங்கு தேர்தலையொட்டி பதாகைகளோ, சுவரொட்டிகளோ கிடையாது. மேலும், அந்த மாகாண மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் பரவலாக பேசப்படுகிறது.