எல்லைப்பிரச்னை: பாகிஸ்தானுக்கு உதவ மறுத்த அமெரிக்கா

  Padmapriya   | Last Modified : 04 Oct, 2018 06:06 pm
pakistan-foreign-minister-seeks-america-to-talk-with-india

இந்தியா - பாகிஸ்தான் இடையில் ரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்ந்து நடத்திட உதவிடுமாறு பாகிஸ்தான் எழுப்பியிருந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது. 

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவி வருகிறது. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் போதெல்லாம் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி பேச்சு வார்த்தைக்கான சூழலை தொடர்ந்து கெடுத்து வருகின்றனர் இதன் காரணமாக பலமுறை  இரு நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகள் ரத்தாகி உள்ளன. 

சமீபத்தில் பாகிஸ்தானில் பதவியேற்ற இம்ரான் கான் அரசு, ''இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்'' என்று தெரிவித்தது. இதற்கு இந்தியாவும் விருப்பம் கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐநா மாநாட்டின்போது சுஷ்மா - குரோஷியிடையே வெளியுறவுத் துறை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. 

ஆனால், எல்லையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் செயல்பாடுகள் இருந்ததை அடுத்து, தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் செயல்படும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என மத்திய அரசு அதை ரத்து  செய்தது. சமீபத்தில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் பாகிஸ்தானுக்கு எதிரான வாதத்தை இந்தியா முன்னெடுத்தது.  

இந்நிலையில் பாகிஸ்தான், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் உதவியைக் கோரியுள்ளது. ஆனால் அமெரிக்கா, இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக பாகிஸ்தான் தரப்பு தற்போது கூறியுள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி, அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மற்றும் ஜான் போல்டன் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று குரோஷி  வேண்டுகோள் வைத்துள்ளார். அவரது கோரிக்கையை அமெரிக்க நிர்வாகம் நிராகரித்துள்ளது .

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய குரோஷி, ''இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஏன் நாங்கள் அமெரிக்காவின் உதவியை நாடுகிறோம் என்றால் நாங்களும் இந்தியாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியவில்லை.  இரு நாட்டுக்கும் இடையில் எதுவும் பேசாமல் இருப்பது ஆரோக்கியமானது கிடையாது. தங்களது நிலைப்பாடு மட்டுமே சரியானது என்று இந்திய அரசு நினைத்திருந்தால், விளைவுகள் இன்னும் மோசமடையத்தான் செய்யும்'' என்று கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு உதவிட அமெரிக்கா மறுத்ததற்கு தகுந்த காரணம் குறிப்பிடாத நிலையில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசின் அடாவடிப் போக்கு இதற்கு காரணமானதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. முன்னதாக பல முறை இதற்காக அமெரிக்கா பாகிஸ்தான் மீது அதிருப்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close