'சார்க்' மாநாட்டிற்காக பாகிஸ்தான் செல்வாரா பிரதமர்?

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 12:58 pm
pm-modi-to-be-invited-to-saarc-summit-says-pak-foreign-office-report

பயங்கரவாத தாக்குதல் காரணமாக கடந்த முறை சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடக்க உள்ள மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அந்நாடு மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. 

'சார்க் எனப்படும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்' என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகள் இணைந்து செயல்படும் வகையில், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. 

இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 உறுப்பு நாடுகள் உள்ள இந்த மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.  இதற்கு முன் 2014ல், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இந்த மாநாடு நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

பின்னர் கடந்த 2016ல், பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக, இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் தோழமை நாடுகளான வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. 

இதனால் மாநாடு ரத்தானது. இந்த நிலையில், ''நடப்பாண்டில் பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும்படி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்,'' என, பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர், முகமது பைசல் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''இரு தரப்பு உறவில், இந்தியா முதல் அடி எடுத்து வைத்தால், நாங்கள், 2 அடி எடுத்து வைப்போம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்தியாவுடன் நாங்கள் போரில் ஈடுபட்டோம். அதனால் சுமுகமான உறவு அவ்வளவு எளிதில் நடக்காது. இருந்தாலும், தற்போது உலக நாடுகளுக்கு இடையேயான உறவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவுக்கு வருவதற்காக, சிறப்பு பாதை அமைக்க முன்வந்துள்ளோம். இதே போல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால், சார்க் மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்'' என்றார். 

பங்கேற்பாரா பிரதமர்? 

கர்தார்பூரில் இந்தியத் தரப்பு கோரிக்கை நிறைவேறியுள்ள இந்த நேரத்தில் பாகிஸ்தானின் அழைப்பு குறித்து இந்தியத் தரப்பில் அதிகாரபூர்வ பதில் அளிக்கப்படவில்லை. ஆனால் சார்க் மாநாட்டுக்கு வரும்படி, இந்தியாவை பாகிஸ்தான் தன்னிச்சையாக அழைக்க முடியாது. மாநாடு குறித்து உறுப்பு நாடுகள் நேரம் ஒதுக்கி உத்தேசித்து ஒருமித்த கருத்தோடு பங்கேற்பது நடைமுறையா இருந்து வருகிறது. இந்நிலையில் இதில் எந்த நாடும் பிற நாட்டை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் சில குறிப்பிடுகின்றன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close