மும்பை தாக்குதல் பாகிஸ்தானில் இருந்துதான் நடத்தப்பட்டது: இம்ரான் கான் ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 05:53 pm

imran-khan-acknowledges-that-26-11-originated-from-pakistani-soil

உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் நடத்தப்பட்டது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்  மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றபின், முதல்முறையாக அவர் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார்.

அப்போது, 2008-இல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்தும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் செயல் கமாண்டர் ஜகி-உர்- ரகுமான் லக்வி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு இம்ரான் கான் அளித்த பதில்:

பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அமைதிக்கான முயற்சியில் இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டு அடிகள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு,  இஸ்லாமாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட, எங்களாலான அனைத்தையும் செய்ய வேண்டுமென்றுதான் விரும்புகிறோம்.

எனவே தான் இந்த வழக்கின் நிலை குறித்து எனது தலைமையிலான அரசு அவ்வப்போது கேட்டறிந்து வருகிறது.   இந்த வழக்கின் முடிவை அறிய பாகிஸ்தான் அரசும் ஆர்வமாக உள்ளது. ஏனெனில், மும்பை தாக்குதல் பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது என இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இந்தியா தமது தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போனதுமான ஆதரங்களை அளிக்கவில்லையென, பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், இம்ரான் கானின் இந்த கருத்து மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மண்ணில்தான் திட்டமிடப்பட்டது என்ற இந்தியாவின் வாதத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

லஷ்கர் -இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள், 2008 நவம்பர் 26 -ஆம் தேதி, மும்பை மாநகரின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையில், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் படுகாயமடைந்தனர்.


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.