ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, காஷ்மீரிகள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் வேண்டும் என்றும் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சையித் சலாவுதீன்.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது மத்திய அரசு. இதனை தொடர்ந்து, மத்திய அரசின் முடிவிற்கு எதிராக கேள்வியெழுப்பிய பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான பல செயல்களிலும் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், காஷ்மீர் நமது பகுதி என்றும், அதற்கு உதவ வேண்டியது நமது கடமை என்றும் கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சையித் சலாவுதீன். மேலும், பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி, அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் கோர பிடியிலிருந்து காஷ்மீர் மக்கள் வெளிவர வேண்டுமெனில் அவர்கள் ஆயுத ஏந்தி இந்தியாவுக்கு எதிராக போராட வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை கொடுத்து உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஓர் நாட்டின் ராணுவத்திற்கு பயங்கரவாத தலைவன் ஒருவன் உத்தரவிடுகிறான் எனில், அந்நாட்டின் நிலை என்ன என்பது அனைவராலும் உணர முடியும். பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கவில்லை, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டோம் என்று கூறும் பாகிஸ்தானின் போலிதனம் இந்த வீடியோவின் மூலம் நிரூபனமாகிவிட்டது என்பதே உண்மை.
Newstm.in